×

ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றக்கோரி விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், பிப். 26: விருத்தாசலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர் சிவஞானம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், வழக்கறிஞர் குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் வட்ட செயலாளர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட தெப்பக்குளத்தை முறையாக தூர்வார வேண்டும். வருகின்ற மாசி மகத்தை ஒட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றை தூய்மைப்படுத்தி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 விருத்தாசலம் பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வருவதை தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விருத்தாசலம் நகராட்சி ஆணையர் (பொ) பாண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Tags : Marxist Communist Demonstration in Circumcision to Perpetuate Occupations ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது