×

வத்தலக்குண்டு அருகே டெட்டனேட்டர் வெடித்து மணிக்கட்டு துண்டானது க்யூ பிரிவு போலீசார் விசாரணை

வத்தலக்குண்டு, பிப். 19: வத்தலக்குண்டு அருகே ஆற்றில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்திய டெட்டனேட்டர் குச்சி வெடித்ததில் ஒருவரது கையின் மணிக்கட்டு துண்டானது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு அருகே மீனாங்கன்னிபட்டியை சேர்ந்தவர் துரையன் (49). திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மீனாங்கன்னிபட்டியில் வீடு கட்டி கொண்டிருந்ததால் இவர் கட்டுமான பணிகளை பார்வையிட விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள வைகை ஆற்றில் மீன் பிடிக்க சென்றார். கிணறு தோண்ட பயன்படும் வெடி பொருளான டெட்டனேட்டர் குச்சிகளை ஆற்றில் வெடிக்க வைத்தால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என்பதால் அதனை கொண்டு சென்று ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக துரையில் கையில் இருந்த டெட்டனேட்டர் குச்சிகள் வெடித்தது. இதில் அவரது கையின் மணிக்கட்டு பகுதி துண்டானது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துரையனுக்கு டெட்டனேட்டர் குச்சிகள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் மற்றும் க்யூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Q-Division ,Wattalakunda ,detonator ,
× RELATED இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்..!!