×

குழாய் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் ஐடிபிஎல் திட்ட பணிகள் நிறுத்தம்.

ஈரோடு, பிப்.13: குழாய்கள் மூலம் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் இருகூர்-தேவனகந்தி பைப்லைன் திட்டம் தொடர்பாக முதல்வரை சந்தித்து முறையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளதை தொடர்ந்து பணிகளை தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாக கர்நாடக மாநிலம் தேவனகந்தி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் குழாய் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு இருகூர்-தேவனகந்தி பைப்லைன் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டமானது பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு ஆகிய வட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, குழாய்கள் அனைத்தும் விவசாய விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லப்பட உள்ளதால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் நிலத்தை கையகப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்தக்கோரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளதால் அதுவரை திட்ட பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து அதிகாரிகள் அதை ஏற்றுக்கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் கூறியதாவது:- மத்திய, மாநில அரசுகள் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் விளை நிலங்களை கூறு போட்டு வருகின்றது. ஐடிபிஎல் திட்டம் என்பது டவர்லைன் திட்டத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவேதான், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, மேற்கு மண்டலத்தையும் இதேபோல் அறிவித்தால் மட்டுமே விளைநிலங்கள் கூறு போடுவதை தடுக்க முடியும். இது தொடர்பாக தமிழக முதல்வரை ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என முறையிட்டோம். இதற்கு திட்ட பணிகள் துணை கலெக்டர் புஷ்பா, பாரத் பெட்ரோலிய ஐடிபிஎல் திட்ட பொது மேலாளர் உமாராணி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.

Tags : IDPL ,
× RELATED நந்தம்பாக்கம் ஐடிபிஎல் வளாகத்தில் 19 குடியிருப்புகள் இடிப்பு