×

கர்நாடக தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்

 

ஈரோடு, ஏப். 24: நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு வருகின்ற 26 மற்றும் அடுத்த மாதம் 7ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

அதன்படி, வரும் 26ம் தேதியும், அடுத்த மாதம் 7ம் தேதியும் நடைபெற உள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவினை உறுதி செய்ய ஏதுவாக தேர்தல் தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

அதன்படி, ஈரோடு, மாவட்டத்தில் கர்நாடக தொழிலாளர்கள் பணியாற்றும் அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்ளில் பணிபுரியும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிரந்தர தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post கர்நாடக தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Erode ,welfare ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...