×

விவி பேடில் பதிவான வாக்குகள் அழிக்கும் பணி தொடங்கியது டிஆர்ஓ பங்கேற்பு வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்

வேலூர், பிப்.7: வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவி பேடில் பதிவான வாக்குகளை அழிக்கும் பணியை டிஆர்ஓ தொடங்கி வைத்தார்.அரக்கோணம், வேலூர் மக்களவை தொகுதிகளுக்கும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேடு இயந்திரங்கள் ஆகியவை வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.இந்நிலையில், அனைத்து கட்சியினர் முன்னிலையில் விவிபேடு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் அழிக்கும் பணி டிஆர்ஓ பார்த்தீபன் தலைமையில் நேற்று தொடங்கியது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், டிஆர்ஓ பார்த்தீபன் நிருபர்களிடம் கூறியதாவது: அரக்கோணம், வேலூர் மக்களவை தொகுதிகள் மற்றும் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் விவிபேடில் பதிவான வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் சென்னை தேர்தல் சிஓ ஆகியோர் அறிவுரையின்படி விவிபேடில் பதிவான வாக்குகள் அழிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் 4724 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2397 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2636 விவிபேடுகளும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.இதில் 458 விவிபேடு, 151 கட்டுப்பாட்டு கருவி, 171 வாக்குப்பதிவு இயந்திரம் என மொத்தம் 780 இயந்திரங்கள் பழுதாகி இருந்தது. இதனை சரிசெய்ய பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும் வாக்குகள் அழிக்கும் பணிகள் ஓரிரு நாளில் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : VV Beadle Vote Deletion Work ,TRO ,Vellore Regulatory Store ,
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு