×

வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் 20 லாரி மூலம் வைக்கோல் விநியோகம்

திருவள்ளூர், பிப். 7: திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடம் வாங்கப்படும் வைக்கோல் வேலூர், தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.எதிர்பார்த்தபடி பருவமழை பெய்யாததால் தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி உட்பட பல மாவட்டங்களில் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இருந்தாலும் நிலத்தடி நீரைக்கொண்டு பேரம்பாக்கம், இருளஞ்சேரி உட்பட பல பகுதிகளில் நெல் பயிர் செய்யப்பட்டிருந்தது. இவை தற்போது அறுவடை செய்யப்படுகிறது. சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை, முன்னெச்சரிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் முகாமிட்டு வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு லோடு வைக்கோல் ₹9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. திருவள்ளூர் வழியாக தினசரி 20க்கும் மேற்பட்ட லாரிகள் வைக்கோலை ஏற்றிக்கொண்டு செல்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி பாசன விவசாய நிலங்கள் வறண்டு விட்டது.

இந்நிலையில் நிலத்தடி நீரைக் கொண்டு பயிர் செய்யப்படும் வைக்கோலையும், வெளிமாவட்ட விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் உள்ளூர் விவசாயிகளின் மாடுகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.இதற்கென திருவள்ளூர் மாவட்டத்தில் தரகர்கள் பலர் உள்ளனர். அவர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வைக்கோலை வாங்கி, வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அரசே வைக்கோலை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : districts ,Vellore ,
× RELATED தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு