×

புழல் பகுதியில் பயனற்ற மாநகராட்சி கட்டிடத்தை புதுப்பித்து கிரான்ட் லைன் மின்வாரிய அலுவலகத்தை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

புழல், மே 25: புழல் பகுதியில் பயனற்ற நிலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தை புதுப்பித்து அதில், கிரான்ட் லைன் மின்வாரிய அலுவலகத்தை அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சென்னை புழல் காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், கன்னடபாளையம், கிருஷ்ணா நகர், சக்திவேல் நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், திருநீலகண்ட நகர் மகாலட்சுமி நகர், திருமால் நகர், தமிழன் நகர், காஞ்சி அருள் நகர், தனலட்சுமி நகர், மெர்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி வாசிகள் தங்கள் வீடுகளின் மின் கட்டணம் செலுத்தவும், மின் சேவைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்கவும் 5 கி.மீ தூரம் உள்ள செங்குன்றம் சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள கிரான்ட் லைன் மின் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். இப்பகுதிக்கு சென்று வர போதியளவில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், புழல் காந்தி பிரதான சாலை பழைய மாதவரம் பகுதியில் இயங்கி வந்த மதுவிலக்கு பிரிவு அலுவலகம் புழல் போலீஸ் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த கட்டிடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது. தற்போது இந்த கட்டிடம் பயனற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை புதுப்பித்து கிரான்ட் லைன் பகுதியில் இயங்கி வரும் மின்சார வாரிய அலுவலகத்தை இந்த கட்டிடத்தில் இயங்கினால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று புழல் கிருஷ்ணா நகர் மற்றும் சக்திவேல் நகர் விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புழல் பகுதியில் பயனற்ற மாநகராட்சி கட்டிடத்தை புதுப்பித்து கிரான்ட் லைன் மின்வாரிய அலுவலகத்தை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Grand Line Electricity Board ,Grand Line ,Chennai ,Puzhal Kavankarai ,Kannapaswamy Nagar ,Kannadapalayam, Krishna ,grand line electricity ,Dinakaran ,
× RELATED புழல் – தாம்பரம் பைபாஸ் சாலையில்...