×

புழல் பகுதியில் ரூ.10 லட்சத்தில் நூலக கட்டிடம் புனரமைப்பு

 

புழல், மே 24: புழல் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புழல் காந்தி பிரதான சாலையில் அரசு நூலகம் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால், மழைக்காலங்களில் கட்டிடத்தின் தளத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு நூலகத்தில் இருந்த புத்தகங்கள் நனைந்து வீணானது. நூலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் சிலர் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினர்.

இதனால் நூலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குடிநீர் வசதி இல்லாததால் வாசகர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, நூலக கட்டிடத்தை புதுப்பித்து குடிநீர் வசதி சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என நூலக வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணை குழுவினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்று திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் நூலக கட்டிடம் புதுப்பிக்கவும், சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தவும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு நூலக கட்டிடம் புதுப்பிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கட்டிட சீரமைப்பு, சுற்றுச்சுவர், குடிநீர் வசதி ஆகியவை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.

The post புழல் பகுதியில் ரூ.10 லட்சத்தில் நூலக கட்டிடம் புனரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Puzhal Gandhi Main Road ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் மாணவர்கள் யோகா பயிற்சி