பெட்டிக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒருவர் கைது வேலூரில் காதல் தகராறில் மோதல்

வேலூர், பிப்.6: வேலூரில் காதல் தகராறில் பெட்டி கடைக்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் சின்ன அல்லாபுரத்தை சேர்ந்தவர் முகமது கலிலுல்லா(28), இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கியுள்ளனர். பின்னர் திடீரென்று அந்த வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடைக்காரரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் கடைக்காரர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பைக் வாலிபர்களை பிடிக்க முயற்சித்தனர். இதில் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றபோது, கடைசியாக அமர்ந்திருந்த வாலிபரின் சட்டையை, பொதுமக்களில் ஒருவர் பிடித்து இழுத்தார். இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபரின் மண்டை உடைந்தது. பொதுமக்களும் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பைக்கில் இருந்து விழுந்து மண்டை உடைந்த வாலிபர் வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த சசிகுமார்(24) என்று தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் கலிலுல்லா மற்றும் சசிகுமார் ஆகிய 2 பேரையும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்த கோகுல்(23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த வாலிபரும், சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த முகமது கலிலுல்லாவும், ஒரே பெண்ணை காதலிப்பதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த சசிகுமார் உட்பட 3 பேரும் முகமது கலிலுல்லாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக அதேபகுதியைச் சேர்ந்த கோகுல்(23) என்பவரை கைது செய்துள்ளோம். மேலும் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர். இந்த வழக்கில் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>