×

முத்துப்பேட்டை ஆசாத் நகர் சிமெண்ட் சாலையில் கழிவு நீர் குழாய் சீரமைப்பு

முத்துப்பேட்டை, பிப். 4: தினகரன் செய்தி எதிரொலியாக முத்துப்பேட்டை ஆசாத்நகர் சிமெண்ட் சாலையில் கழிவுநீர் குழாய் சீரமைக்கப்பட்டு பள்ளமும் மூடி சரி செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே செல்லும் ஆசாத்நகர் சிமெண்ட் சாலையில் குடியிருப்புகளிலிருந்து சாலையின் குறுக்கே செல்லும் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதனால் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டது. இதனால் அதிகளவில் கழிவுநீர் சென்றாலும் வேறு பகுதியில் அடைப்பு ஏற்பட்டாலும் குடியிருப்புகளின் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தநிலையில் இந்த பள்ளத்தால் சாலையில் செல்லும் வாகனங்கள் தடுமாறி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. அதேபோல் டூவீலர், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் தெரியாமல் வாகனத்தை விட்டு விழுந்து விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டனர். அதேபோல் இரவில் செல்லும் மக்கள் இந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. இதில் முதியோர்கள், சிறுவர்கள் விழுந்து அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கடந்த 2ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து தினகரன் செய்தி எதிரொலியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அந்த பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் குழாய் சீரமைக்கப்பட்டு சாலையில் இருந்த பள்ளமும் மூடி சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Tags : Azadnagar Cement Road ,
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்...