×

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு சிறப்பு வழிகாட்டல்: மஞ்சக்குடியில் 13ம் தேதி நடக்கிறது

திருவாரூர், மே 10: திருவாரூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி வரும் 13ம் தேதி மஞ்சக்குடியில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் நலன் கருதி கல்வி துறையில் பல்வேறு உன்னத திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பெண்கள் தங்களது வாழ்கையில் முன்னேறி சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மாணவிகளின் மேற்படிப்பினை ஊக்குவிக்கும் வகையில் புதுமை பெண் திட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். பெற்றோர்கள் மற்றும் மாணவிகளின் கோரிக்கையின் பேரில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கும் புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்குவதற்கு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மாணவிகளை போன்று மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு மாதம் ரூ ஆயிரம் உதவிதொகை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 12ம் வகுப்பு முடித்த மாணவ,மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்து வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் நான் முதல்வன் திட்டத்தின் அடுத்த மைல்கல்லாக கல்லூரிக் கனவு என்னும் சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சியும் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிலையில் 3வது ஆண்டாக நடப்பாண்டிலும் இந்த நிகழ்ச்சியானது ஓவ்வொரு மாவட்டமாக துவங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியானது வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து கலெக்டர் சாரு கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரி கனவு நிகழ்ச்சியானது வரும் 13ம் தேதி மஞ்சக்குடி சுவாமிதயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணைஅறிவியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயர்கல்விப் படிப்புகள் சார்ந்தும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் இப்படிப்புகள் படிப்பதற்கான வங்கிகடன்கள் பெறுவது குறித்தும் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் சிறந்த வல்லுநர்களால் வழிகாட்டல் வழங்கப்படவுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சார்ந்த மாணவ,மாணவிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுகொள்ளபடுவதுடன் இமலும இது தொடர்பான விபரங்களுக்கு நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண் 04365 250126 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு சிறப்பு வழிகாட்டல்: மஞ்சக்குடியில் 13ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Manjakudi ,Tiruvarur ,Collector ,Saru ,DMK ,government ,Tamil Nadu ,
× RELATED விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பல்வேறு படிப்புகளில் சேர்ந்து