×

கார்பன் தொழிற்சாலையை மூட கோரி விவசாயிகள் மாசடைந்த தண்ணீருடன் மனு

திருப்பூர், பிப். 4: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்: காங்கயம் வட்டம் அவிநாசிபாளையம்புதூர் வட்டமலை கிராமத்தில் தனியார் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கழிவுநீரை ஆலைக்குள் உள்ள நில பரப்பில்  இறக்குவதால், அவிநாசிபாளையம்புதூர், வட்டமலை, சேடங்காளிபாளையம், கொழந்தான்வலசு, பாப்பிரெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக மாசுபட்டுள்ளது.

இதனால், நிலத்தடி நீர்மட்டத்தை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 2000 ஏக்கரில் நிலத்தடி நீரும், தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும் வீடுகளில் படியும் கரிப்புகை பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பதால் மக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். ஆகவே கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு, தனியார் கார்பன் தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி சுகாதாரமற்ற தண்ணீர் பாட்டிலுடன் மனு அளித்தனர்.

முத்தனம்பாளயம் பகுதி பொதுமக்கள்:   திருப்பூர், கோயில்வழி மேற்கு புதுபிள்ளையார் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டில் மாகாளியம்மன் கோயில் கட்ட திட்டமிட்டிருந்தோம். இந்நிலையில், அப்பகுதியில் குடிநீர் தொட்டி கட்டவுள்ளதாக தெரிய வருகிறது. ஆகையால், தொட்டியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.

 திருப்பூர் 24வது வார்டு பொதுமக்கள்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 24வது வார்டுக்குட்பட்ட கொங்கு மெயின் ரோடு டி.எஸ்ஆர்.லே அவுட் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறோம். இங்கு, மாநகராட்சியின் பள்ளிக்கூடம், பள்ளிவாசல், சர்ச் மற்றும் விநாயகர் கோயிலும் உள்ளன. டி.எஸ்.ஆர்.லே அவுட் பகுதியில் டாஸ்மாக் கடை எண் 1960 உள்ளது. இந்த கடைக்கு பல்வேறு பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் சமூக விரோதிகளும் மது அருந்த வருகின்றனர். இவர்களால் பொதுமக்கள் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குன்னாங்கல்பாளையம் பகுதி பொதுமக்கள்: திருப்பூர், பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் குன்னாங்கல்பாளையம் பகுதியில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.  இப்பகுதியில் டையிங் நிறுவனம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நிறுவனத்தை அமைக்க முயற்சி செய்து வருவதாக தெரியவருகிறது. மேற்படி சாயத் தொழிற்சாலை அமைந்தால் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு விடும். இது குறித்து ஏற்கனவே சுற்றுச்சூழல் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 திருட்டு போன நகையை கண்டுபிடிக்க கோரி தர்ணா: திருப்பூர், வாய்க்கால் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தன்பாலன் (59), மனைவி சித்ரா. நாங்கள் கடந்த 53 ஆண்டாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு எனது வீட்டில் வைத்திருந்த 35 பவுன் நகை மற்றும் பணம் ரூ.90 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து, தெற்கு போலீசில் புகார் அளித்தோம். புகார் அளித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை கண்டுபிடித்து கொடுக்கவில்லை, என மனுவில் கூறியுள்ளார்.   இந்நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை சமாதனப்படுத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்