×

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சி

தம்மம்பட்டி, ஜன.31:  தம்மம்பட்டியில் வரும் 11ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக, சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் நடக்கும் ஜல்லிக்கட்டில் அதிகளவிலான காளைகளுடன், காளையர்களும் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 11ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கச் செய்வதற்காக தம்மம்பட்டி பகுதியில் காளைகளை வளர்த்து வருவோர் உரிய பயிற்சியளித்து வருகின்றனர். காளைகளுக்கு என பிரத்யேக உணவு பட்டியலை தயார் செய்து அவ்வப்போது தேவைக்கேற்ப கொடுத்தும், உரிய பயிற்சியளித்தும் தயார்படுத்துகின்றனர். குறிப்பாக நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று நன்கு குளிப்பாட்டி ஆசுவாசப்படுத்தி, உடல் வலுவிற்காக நீச்சல் அடிக்க விடுகின்றனர்.

மேலும், விவசாய தோட்டங்களுக்கு மாடுகளை கொண்டு சென்று போக்கு காட்டுகின்றனர். அப்போது, அந்த மாடுகள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணல் குவியல் மீது முட்டி மோதி, ஆக்ரோஷத்துடன் குத்தி கிளறுவதை கணக்கிடுகின்றனர். அதனை வைத்து ஜல்லிக்கட்டு களத்தில் அந்த காளையானது மாடு பிடி வீரர்கள் எந்த அளவிற்கு சமாளிக்கும். வெற்றிவாய்ப்பிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என கணித்து, மேலும் தீவிர பயிற்சியளிப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் புல்லட் பார்த்திபன் என்பவர் கூறுகையில், ‘எனக்கு ஜல்லிக்கட்டு காளைகளின் மீது ஆர்வம் அதிகம் என்பதால் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 6 காளை இனங்களை வளர்த்து வருகிறேன். காளை ஒன்றுக்கு ஒரு நாளைக்கு ₹500 வரையிலும் செலவு செய்து குழந்தைகள் போல் கவனித்து கொள்கிறேன். வெளியூர்களுக்கு ஒன்று முதல் 2 டோக்கன் கிடைப்பதால் இரண்டு காளைகளை மட்டுமே அவிழ்த்து விடுகிறேன். இந்நிலையில், உள்ளூர் போட்டியில் பங்கேற்பதற்காக எனது 6 காளைகளையும் தயார்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளேன். இதற்காக நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளை முறையாக அளித்து வருகிறேன்,’ என்றார்.

Tags : Dhammampatti ,
× RELATED தம்மம்பட்டி அருகே சுவேத நதியில் தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு