×

கால்நடை தீவனமாக பயன்படும் ஒரு ஏக்கர் வைக்கோல் 10 ஆயிரத்துக்கு விற்பனை

பள்ளிபாளையம், ஜன.31: கால்நடை  தீவனம் மற்றும் காளான் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் வைக்கோலுக்கு கடும்  கிராக்கி ஏற்பட்டுள்ளது. நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், ஒரு ஏக்கர் வைக்கோல் ₹10 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. ஆனால் இயந்திரத்தில் நெல் அறுவடை செய்த வைக்கோலின் விலை பாதியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை கிழக்கு கரை கால்வாய் பாசனத்தின் கடைமடை பகுதியான பள்ளிபாளையத்தில் நெல் அறுவடை  பணிகள், இயந்திரம் மற்றும் கூலி ஆட்களை கொண்டு நடந்து வருகிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறையால், பெரும்பாலான வயல்களில்  இயந்திரங்கள் மூலமே நெல் அறுவடை செய்யப்படுகிறது. இதனால் விரைவாக அறுவடை முடிகிறது. கூலி ஆட்கள் மூலம் அறுத்து,  களத்தில் கொட்டி அடித்து, தூற்றி மூட்டை பிடித்து கொண்டுவர 3  நாட்கள் வரை ஆகிறது. அறுவடைக்கு பின் காய்ந்து கிடக்கும் வைக்கோல், கால்நடைகளுக்கு  தீவனமாக பயன்படுகிறது. மேலும், காளான் பண்ணைகளிலும் வைக்கோல்  பயன்படுத்துவதால், கால்நடை வளர்ப்போரும், காளான் பண்ணையாளர்களும் இங்குள்ள  வயல் வெளிகளில் வைக்கோலை விலை பேசி வாங்கிச்செல்கின்றனர்.

கையால்  அடிக்கப்பட்ட வைக்கோல் சேதாரம் குறைவாக இருப்பதால், ஒரு ஏக்கர் வைக்கோல் ₹10 ஆயிரம் வரை விற்பனையாகிறது. அதேசமயம் இயந்திரம் மூலம் அடிக்கப்படும் வைக்கோலில்  உறுதித்தன்மை குறைந்து, நைந்த நிலையில் இருப்பதால், சேதாரம் அதிகமாக உள்ளது. இதனால் இயந்திர அறுவடையில் கிடைக்கும் ஒரு ஏக்கர் வைக்கோல் ₹5  ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அறுவடை நேரத்தில் வைக்கோலின் விலை  குறைவாக இருப்பதால், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்நடை மற்றும்  காளான் வளர்ப்போர், பள்ளிபாளையம் பாசன பகுதியில் போட்டி போட்டு வைக்கோலை வாங்கிச்செல்கின்றனர்.

Tags :
× RELATED பள்ளி முன்பு பான்மசாலா விற்பனை