×

குமுளி மலைச்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிர்பலி தவிர்ப்பு

கூடலூர், ஜன. 31: குமுளி மலைச்சாலையில் பிரேக் பழுதானதால் அரசு பஸ் கவிழ்ந்தது. ஆனால், டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் பெங்களூரு, புதுச்சேரி போன்ற இடங்களிலிருந்தும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் குமுளிக்கு வந்து செல்கின்றன. இதில் வாகனங்கள் லோயர் கேம்ப்பிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைச்சாலையில் செல்கிறது. இம்மலைச்சாலையில் ஆபத்தான ஹேர்பின் வளைவுகளும், ராட்சத பள்ளங்களும் உள்ளன. இந்த நிலையில் பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்த பஸ் ஒன்று நேற்று காலை குமுளியிலிருந்து முப்பத்தி இரண்டு பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டி வந்துள்ளார்.

இந்த பஸ் குமுளியிலிருந்து மலைச்சாலையில் இறங்கி வந்துகொண்டிருந்தது. மாதாகோவில் பகுதியில் உள்ள வளைவில் டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றபோது பிரேக் பிடிக்கவில்லை எனத்தெரிகிறது. இந்த வளைவை ஒட்டி மிகப்பெரும் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் டிரைவர் பஸ்சை சாமர்த்தியமதாக ஓரத்தில் இருந்த மண்திட்டில் மோதி நிறுத்த முயன்றார். இருப்பினும் மண்திட்டில் மோதிய பஸ் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மூன்று பேருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் மலைச்சாலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், லோயர் எஸ்ஐ உதயன் தலைமையில் போலீசார், மற்றும் தீயணைப்புத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து குமுளி மலைச்சாலையில் ஒருபுறமாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மதியம் பஸ்சை மீட்கும்போது சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

Tags : accident ,Kumuli Mountains ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...