×

உளுந்து மூட்டைகளை எடை போடாததால் ஆத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே விவசாயிகள் மறியல்

உளுந்தூர்பேட்டை, ஜன. 30: உளுந்தூர்பேட்டையில் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனைக் கூடத்திற்கு உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக உளுந்து அறுவடை செய்யும் விவசாயிகள் அதனை மூட்டை பிடித்து மினி டெம்போ, டிராக்டர், மாட்டு வண்டிகளில் கொண்டு வந்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.

 கடந்த இரண்டு நாட்களாக அதிகளவு உளுந்து வரத்து இருந்ததால் நேற்று விவசாயிகள் கொண்டு வந்த உளுந்து மூட்டைகளை இரவு வரை வைத்திருந்து எடைபோடாமல் திருப்பி அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் எதிரே விழுப்புரம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்- உளுந்தூர்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, குருபரன் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை