×

கொடி ஏற்றி கொண்டாட்டம் வணக்கம்... செய்திகள் வாசிப்பது சிறந்தது

அதிகாலை நேரம்... வீட்டு வாசலில் 2 விஷயங்களை பார்க்க முடியும். ஒன்று பால். மற்றொன்று செய்தித்தாள். பால் குடித்தால் உடல் ஆரோக்கியம் பெறும். செய்தித்தாள் படித்தால் அறிவு வளர்ச்சி பெறும். நாட்டு நடப்புகளை கோர்வையாக, ருசிகரமாக தரும் செய்தித்தாள்களை கவுரவிக்கும் ஒரு தினமே தேசிய செய்தித்தாள் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி தேசி செய்தித்தாள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் வரும் செய்தித்தாளுக்கு, ஜனவரி 29ம் தேதி கிரீடம் சூட்ட வேண்டிய அவசியமென்ன என்கிறீர்களா? இந்தியாவில் முதன்முதலாக  ‘ஹிக்கீஸ் பெங்கால் கெஜெட்’ என்ற வார இதழ் 1780ம் ஆண்டு, ஜன.29ம் தேதி வெளியிடப்பட்டது. ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ இதனை வெளியிட்டார். கொல்கத்தாவில் இருந்து, அரசியல், வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது ஹிக்கீஸ் பெங்கால் கெஜெட். அப்போது நடந்த அரசியல் சம்பவம்,  போர் சம்பவங்களை பரபரப்பாக இந்த பத்திரிகையில் வெளியிட்டார். அதன்பின்னரே தினமும் செய்திகளை வழங்கும் செய்தித்தாள்கள் அறிமுகமாயின. உலகில் செய்தித்தாள்கள் அறிமுகமான ஆண்டு தெரியமா? கிபி 1476ல் இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார். அப்போது கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முனைந்த மேலை நாட்டினர், 1622ம் ஆண்டில் முதல் செய்தி இதழாக ‘தி வீக்லி நியூஸ்’ வெளியிடப்பட்டது. பின் லண்டன் கெஜட்டர் என்ற நாளிதழ் 1666ல் வெளிவந்தது.

பின்னர் நாளிதழ்களே காலை, மாலை என வெளிவரத்தொடங்கின. ஒரு செய்தித்தாளானது பொதுவாக அரசியல், வணிகம், குற்றம், பொழுதுபோக்கு, விளையாட்டு முதலிய பல துறைகள் சார்ந்த செய்திகளைத் தாங்கி வருகின்றன. இதுதவிர தலையங்கம், கார்ட்டூன்களும் வருவதுண்டு. நாட்டு நடப்புகள், பொழுதுபோக்கு இரண்டையும் சேர்த்து தருவதில் செய்தித்தாளுக்கு முக்கிய பங்குண்டு. அது மட்டுமல்ல... வர்த்தக விளம்பரங்களையும் வெளியிட்டு, வாசகர்களுக்கு வணிக சேவையை ஆற்றி வருகிறது.நாம் அறிவை வளர்க்க எத்தனையோ புத்தகங்களை படித்தாலும், ஒரு செய்தித்தாளே நாட்டு நடப்புகளை அள்ளித்தரும் நற்களஞ்சியமாக விளங்குகிறது. நம் வீட்டு பிள்ளைகளின் வாசிப்பு பழக்கத்தை பெருக்க, உலக அறிவை வளர்த்துக் கொள்வதில் செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டு பட்ஜெட்டில் இதற்கென ஒரு தொகையை ஒதுக்கி வீட்டில் கட்டாயம் செய்தித்தாளை வாங்குங்கள். அதனை உங்கள் குழந்தைகளுக்கும் படிக்க சொல்லித்தாருங்கள். இதன்மூலம் அவர்களுக்கு வாசிப்பு பழக்கம் அதிகமாகும். அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இருக்கும்.செய்தித்தாள் தயாராகும் முறையை சுருக்கமாக பார்க்கலாமா? ஒரு செய்தித்தாள் 24 மணி நேரமும் மாறி, மாறி தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களை அடிப்படையாக கொண்டது. செய்தி சேகரித்தல், உருவாக்குதல், படம் பிடித்தல், வடிவமைத்தல், அச்சிடுதல், விற்பனை செய்தல் என தொடர் சங்கிலியாக இந்த பணி நடைபெறுகிறது. தற்போது மின்னணு முறையிலும் செய்தித்தாள்கள் வெளியாகின்றன. இதன்மூலம் ஒருவர் எந்த நேரத்திலும் செய்திகளை படிக்க முடியும். இருப்பினும், ஒரு சேமிப்பாக, கையிருப்பாக எந்த நேரத்திலும் படிக்க்கூடிய செய்தித்தாள்களை வாங்கி படிப்பதே நன்று.

Tags :
× RELATED செய்தி துளிகள்