×

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நோட்டீஸ் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில், ஜன.24: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில் ஒரே இடத்தில் நாட்கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அவற்றை அப்புறப்படுத்த கோரி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரங்களில் ஏராளமான வாகனங்கள் நாட்கணக்கில் நிறுத்தி விடப்படுகின்றன. சில வாகனங்கள் நாட்கணக்கில் இவ்வாறு நிறுத்திவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த  வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை  அப்புறப்படுத்துமாறு அந்த வாகன ஓட்டுநர்களை கேட்கும் வகையில் நோட்டீஸ் ஒட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு ஆய்வாளர் கெபின் ஜாய், நாகர்கோவில் போக்குவரத்து ஆய்வாளர் அருள் தலைமையில் அதிகாரிகள் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த  வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகராட்சி அறிவிப்பு என்று ஒட்டப்பட்டுள்ள இந்த நோட்டீசில் ‘பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் இவ்வாகனத்தை மூன்று  நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் மாநகராட்சி சார்பில் அப்புறப்படுத்தப்பட்டு அதற்குரிய தொகை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், விபத்துகள்  ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள அரசு பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Tags : Notice Corporation ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி