களக்காடு அருகே வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்காததால் அடிக்கடி விபத்து

களக்காடு, ஜன.23:  களக்காடு அருகே வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்காததால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.  களக்காட்டில் இருந்து தலையணை செல்லும் சாலையில் அஞ்சுகிராமத்தில் நாங்குநேரியான் கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. இதனால் பாலம் பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்பட்டது. பழுதடைந்த இந்த பாலத்தை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் களக்காடு பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அஞ்சுகிராமம், நாங்குநேரியான் கால்வாயிலும் கடும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அஞ்சுகிராமத்தில் உள்ள பழுதடைந்த பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் பாலம் சேதமடைந்தது. அதன்பின் பாaலம் சீரமைக்கப்படவில்லை.

 பாலம் சேதமடைந்து காணப்படுவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் டூவீலர்களில் வருபவர்கள் பாலத்தின் சேதமடைந்த பள்ளத்தில் சிக்கி கிழே விழுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாலத்தின் வழியாகத்தான் களக்காடு தலையணை, புலிகள் காப்பக வனத்துறை அலுவலகங்கள், வனத்துறை ஊழியர்களின் குடியிருப்பு மற்றும் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கும், சிவபுரம் கிராமத்திற்கும் செல்ல வேண்டும். தினசரி ஏராளமான வாகனங்கள் சேதமடைந்த பாலத்தை கடந்து செல்கின்றன. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : Flood damage ,Kalakkad ,bridge ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு