×

பொங்கல் பண்டிகையையொட்டி பெரியகுளத்தில் கரும்பு அறுவடை ஜரூர் கட்டு ₹250க்கு விற்பனை

பெரியகுளம், ஜன.14: பெரியகுளத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கரும்பு அறுவடை ஜரூராக நடைபெற்று வருகிறது. நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் பொங்கல் தினத்தையொட்டி செங்கரும்புகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டு வரை 500 ஏக்கர் வரை கரும்பு விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது மழை இன்மை மற்றும் கூலியாட்களின் கூலி உயர்வு போன்ற காரணங்களால் 200 ஏக்கராக குறைந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது சாகுபடி செலவு மற்றும் கூலியாட்களின் செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போது இப்பகுதியில் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் கரும்புகள் நல்ல உயரம், மற்றும் நல்ல கருப்புகலர் இருப்பதால் 10 கரும்புகள் உள்ள ஒரு கட்டிற்கு ரூ.250 முதல் 300 வரை விற்பனையாவதாக இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டம் அறிவிப்பால் கரும்பு நல்ல விலைக்கு விற்றதாகவும், குறைந்த ஏக்கரில் பயிரிட்டுள்ளதால் இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கரும்பிற்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பால் இப்பகுதி விவசாயிகள் கரும்பு அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு