×

ராமகுப்பத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி வாலிபர் பலி 50 பேர் படுகாயம்

திருமலை, ஜன.13: சித்தூர் அடுத்த ராமகுப்பத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ராமகுப்பம் மண்டலம், பாரதமிட்டா பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பாரத மிட்டா கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. காளைகள் ஒவ்வொன்றாக போட்டியில் பங்கேற்பதற்காக கழற்றி விடப்பட்டது. அப்போது அதனை பிடிக்க முயன்ற சின்னபலதர் கிராமத்தை சேர்ந்த அப்துல்பாஷா(27) என்பவர் மாடு குத்தியதில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘நீதிமன்றம் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நடத்த கூடாது என உத்தரவிட்டது. மேலும், போலீசார் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நடத்த கூடாது என்று அறிவிப்பு மட்டும் விடுகின்றனர். ஆனால் போட்டிகள் நடைபெற்றால் போலீசார் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். மாநில எல்லைப் பகுதி என்பதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் சாராயம் கொண்டு வரப்பட்டு ஆந்திர எல்லையோர கிராமங்களில் விற்பனை செய்வதால், அதனை குடித்து விட்டு குடிமகன்கள் குடிபோதையில் மாடுகளைப் பிடிக்க முயன்று இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ramakuppam: Cow slaughter ,
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...