×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், 11 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது

திருவண்ணாமலை, ஜன.12: திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் 11 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 4 ஒன்றியங்களில் மட்டுமே வென்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 860 ஊராட்சி மன்ற தலைவர், 6,199 ஊராட்சி வார்டு உறுப்பினர், 341 ஒன்றிய கவுன்சிலர், 34 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடந்தது. தொடர்ந்து, கடந்த 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற அனைவரும் கடந்த 6ம் தேதி பதவிேயற்றனர். தொடர்ச்சியாக, கிராம ஊராட்சி துணைத்தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது.

அதன்படி, திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ேதர்தல் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலையில் நடந்தது. திமுக சார்பில் 7வது வார்டு மாவட்ட கவுன்சிலர் சீ.பார்வதி, அதிமுக சார்பில் 5வது வார்டு மாவட்ட கவுன்சிலர் ஆர்.கவுரி போட்டியிட்டனர். மொத்தமுள்ள 34 கவுன்சிலர்களில் 32 பேர் வாக்களித்தனர். 2 கவுன்சிலர்கள் வாக்களிக்க வரவில்லை. வாக்குச்சீட்டு முறையில் நடந்த மறைமுகத் தேர்தலில், சீ.பார்வதி(திமுக) 24 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஆர்.கவுரி(அதிமுக) 8 வாக்குகளை பெற்றார். பின்னர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை, சீ.பார்வதியிடம் கலெக்டர் கே,எஸ்.கந்தசாமி வழங்கினார்.

தொடர்ந்து, நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலில், திமுகவை சேர்ந்த ரா.பாரதி வெற்றி பெற்றார்.மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு ஆகிய ஒன்றியங்களில் திமுக பெரும்பான்மை பெற்றிருந்த நிலையில், தேர்தலை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் திடீரென அறிவித்தனர். மீதமுள்ள 16 ஒன்றியங்களில் மட்டும் நேற்று ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடந்தது.அதில், 10 ஒன்றியங்களில் திமுகவும், தலா ஒரு ஒன்றியத்தில் காங்கிரஸ், பாமாகவும், 4 ஒன்றியங்களில் அதிமுகவும் வெற்றிபெற்றன. அனக்காவூர் ஒன்றியத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை எதிர்த்து, கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக எதிர்த்து நின்று வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ஒன்றியக்குழு தலைவர்களின் விபரம்:திருவண்ணாமலை ஒன்றியம்: கே.கலைவாணி கலைமணி(திமுக), கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் பூ.அய்யாக்கண்ணு(திமுக). செங்கம் ஒன்றியம் கு.விஜயராணி(காங்கிரஸ்). புதுப்பாளையம் ஒன்றியம் சி.சுந்தரபாண்டியன் (திமுக). போளூர் ஒன்றியம் பெ.சாந்தி (திமுக).கலசபாக்கம் ஒன்றியம் ர.அன்பரசி (திமுக), சேத்துப்பட்டு ஒன்றியம் அ.ராணி (திமுக), ஜமுனாமரத்தூர் ஒன்றியம் மு.ஜீவா(அதிமுக), ஆரணி ஒன்றியம் சு.கனிமொழி (திமுக), மேற்கு ஆரணி ஒன்றியம் எஸ்.பச்சையம்மாள் (அதிமுக), பெரணமல்லூர் ஒன்றியம் இ.இந்திரா (திமுக).செய்யாறு ஒன்றியம் ஓ.ஜோதி (திமுக), வெம்பாக்கம் ஒன்றியம் த.ராஜூ (அதிமுக), அனக்காவூர் ஒன்றியம் ஆர்.திலகவதி (பாமக), வந்தவாசி ஒன்றியம் ஆ.ஜெயமணி (அதிமுக), தெள்ளாறு ஒன்றியம் இ.காமாட்சி (திமுக).

ஒன்றியக்குழு தலைவராக வெற்றி பெற்ற அனைவரும், அதற்கான சான்றுகளை உடனடியாக பெற்றனர். ஒன்றியக்குழு கூட்ட பதிவேட்டில், தேர்தல் நடந்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டன.இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் நேற்று துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுத்தனர்.

Tags : DMK Alliance ,District Panchayath Chairman ,Thiruvannamalai District ,11 Union Committee Leaders ,
× RELATED பாறை வெடித்து தலையில் விழுந்து விவசாயி பலி