×

மின் கட்டண செலவை குறைக்க தொழிற்சாலைகளில் சோலார் பேனல் அமைப்பு


திருப்பூர், ஜன. 9: திருப்பூர் பின்னலாடை துறையினர் மின்சாரத்தின் செலவை குறைக்க சோலார் முறையை பயன்படுத்த தீவிரம் காட்டிவருகின்றனர்.   கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பஞ்சாலைகள், விசைத்தறி கூடங்கள், டெக்ஸ்டைல்ஸ் உதிரி பாகங்கள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், கிரைண்டர் உற்பத்தி, கைத்தறி, பின்னலாடை நிறுவனங்கள், டையிங் உட்பட லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இவை அனைத்திற்கும் மின்சாரம் அவசியம். நீர்நிலை மின்சார உற்பத்தி, அனல் மின் நிலையம்,  காற்றாலை மின்சாரம் ஆகியவற்றின் மூலம் தொழிற்சாலைகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்காக தொழிற்சாலை உரிமையாளர்கள் புறநகர் பகுதிகளில் இடம் வாங்கி பல கோடி மதிப்பில் காற்றாலை அமைத்தனர்.  இதில் தாராபுரம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, சுல்தான்பேட்டை, பல்லடம், அவிநாசி உட்பட பல்வேறு இடங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகிறது. வெளிமாநிலங்களிலிருந்து மின்சாரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், தமிழகத்தில் மின் கட்டணம் அடிக்கடி உயர்ந்து வருகிறது. இதனால் பின்னலாடை துறையினர் ரூப் சோலார் பேனல்கள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் மின்சார செலவை கட்டுப்படுத்த தொழில் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 இது குறித்து தொழில் துறை ஆலோசகர் ராமநாதன் கூறியதாவது: தொழில் துறையினருக்கு மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக மின் வாரியத்திற்கு பல லட்சம் கட்டணம் செலுத்துகின்றனர். இவை அனைத்தும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையில் சேரும். தொழிற்சாலைகளுக்கு 50 எச்.பி. முதல் 500 எச்.பி, ஆயிரம் எச்.பி. மின்சாரம் தேவைப்படின் தமிழக அரசுக்கு நிறுவனங்கள் டெபாசிட் செலுத்தவேண்டும். இதை தவிர்க்கும் பொருட்டாக மேற்கூரையின் மீது ரூப் சோலார் பேனல் போர்டுகள் பொருத்தி தங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்காக சோலார் நிறுவனங்களே தொழிற்சாலைகளை அணுகி ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.50க்கு வழங்குகின்றனர். மேலும் பராமரிப்பு உட்பட அனைத்தும் பணிகளையும் செய்து கொடுக்கின்றனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை குறைத்துக்கொள்வதாக சோலார் நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைத்து வருகின்றனர். இதனால், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.3 செலவு குறைந்துள்ளது. இதனால், ரூப் சோலார் பேனல் அமைக்க தொழில் துறையினர் தீவிரம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : factories ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...