×

காதலிக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை கொலை ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

கோவை,ஜன.9: திருப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன் (25). சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரும் அவினாசியைச் சேர்ந்த சத்யா(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரது காதல் விவகாரம் சத்யாவின் வீட்டில் தெரிந்ததையடுத்து, அவருக்கு கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஆனந்த குட்டன்(28) என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து மணிகண்டனும், சத்யாவும் சேர்ந்து ஆனந்த குட்டனிடம் தங்களது நிலைமையை விளக்கிக் கூறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதன்படி கடந்த 2013 மே 6ம் தேதியன்று தனது நண்பர்களுக்கு பத்திரிக்கை அளிக்க வேண்டும் என்று கூறி ஆனந்த குட்டனை, சத்யா அவினாசிக்கு வரவழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டனை தனது நண்பர் எனக்கூறி ஆனந்த குட்டனுக்கு, சத்யா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பின்னர் கேரளா செல்வதாகக் கூறிய ஆனந்த குட்டனை, தான் பொள்ளாச்சி செல்வதாகவும் செல்லும் வழியில் தனது சரக்கு வாகனத்திலேயே அவரை இறக்கிவிடுவதாகவும் மணிகண்டன் கூறியுள்ளார். இதை நம்பி அவரது வாகனத்தில் ஆனந்தகுட்டன் சென்றுள்ளார்.

பின்னர் சிறிது தூரம் சென்றதும் தனது நண்பர்கள் சதிஷ்குமார், விவேக், ரஞ்சித்குமார் ஆகியோரையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் சென்றார். செல்லும் வழியில் பூசாரிப்பட்டி எனும் கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்திய மணிகண்டன், தானும் சத்யாவும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், எனவே திருமணத்தை நிறுத்திவிட்டு தங்களது காதலைச் சேர்த்து வைக்குமாறும் ஆனந்த குட்டனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த குட்டன், மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதையடுத்து, தனது வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியைக் கொண்டு ஆனந்த குட்டனை மணிகண்டன் தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலத்தை தாங்கள் வந்த வாகனத்தில் மறைத்து எடுத்துச் சென்று, குண்டடம் அருகே புதரில் வீசி சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகனைக் காணவில்லை என ஆனந்த குட்டனின் தந்தை அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆனந்த குட்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன், அவரது காதலி சத்யா, நண்பர்கள் சதிஷ்குமார், விவேக், ரஞ்சித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை நான்காவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  விசாரணை முடிவில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த்  நேற்று உத்தரவிட்டார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சத்யா,சதிஷ்குமார், விவேக், ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததையடுத்து அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மற்றொரு குற்றவாளியான ரஞ்சித்குமார் மீதான வழக்கு விசாரணை சிறார் வழக்குக்கான நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Tags : Auto driver ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...