×

கிரண்பேடி என்னிடம் நேராக மோத வேண்டும்

புதுச்சேரி, ஜன. 9:  தனிப்பட்ட விரோதமென்றால் கிரண்பேடி என்னிடம் நேராக மோத வேண்டுமென அமைச்சர் மல்லாடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் மற்றொரு பிராந்தியமான ஏனாமில் கடந்த சில மாதங்களுக்கு முன் கவர்னர் கிரண்பேடி ஆய்வுக்கு சென்றிருந்தார். ஏனாம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கிரண்பேடி  ஆய்வுக்கு வரக்கூடாது எனக்கூறி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றியதோடு, கவர்னரின் காரை பின் தொடர்ந்து அமைச்சரின் ஆதரவாளர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, நான் மீண்டும் ஜனவரி மாதம் ஏனாமுக்கு வருவேன் என கவர்னர் கூறியிருந்தார். அதன்படி நேற்று ரயில் மூலம் தனது குழுவினருடன் செல்ல இருப்பதாக முன்கூட்டியே தெரிவித்தார். கவர்னர் வந்தால் எதிர்ப்பினை பதிவு செய்ய பல்வேறு போராட்டங்களுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பயணத்தை திடீரென கவர்னர் ரத்து செய்திருக்கிறார்.

இது குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், சங்கராந்தியை  முன்னிட்டு கடந்த 18 ஆண்டுகளாக ஏனாம் தொகுதியில்  சுற்றுலாத்துறை சார்பில்  ஏனாம் மக்கள் திருவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு  நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என திட்டமிட்டு துணைநிலை ஆளுநர்  நிதி ஒதுக்க வேண்டாம் என  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஏனாமில் வளர்ச்சியே  இருக்ககூடாது என கவர்னர் நினைக்கிறார். என் மீது  தனிப்பட்ட விரோதம் இருந்தால் நேரடியாக துணைநிலை ஆளுநர் மோத வேண்டும்.

தொகுதி வளர்ச்சியை தடுக்க நினைப்பது தவறானது. இதனை எதிர்த்து துணைநிலை ஆளுநருக்கு எதிராக மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறேன்.  இதற்காகவே ஏனாமுக்கு துணைநிலை ஆளுநர் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொறியியல் கல்லூரி கட்ட அனுமதி அளித்து அதற்கான நிதியை ஒதுக்கி கடந்த  2019ம் ஆண்டு பாரத பிரதமர் வீடியோ கான்பரன்சிங் முறையில் அடிக்கல் நாட்டினார். ஆனால்  கட்டுமானப்பணிகளை தொடங்க விடாமல்  கிரண்பேடி தடுக்கிறார் மத்திய  கல்லூரி கட்ட அனுமதி  அளித்தும் அதனை தடுப்பது ஏன்? இது குறித்து பிரதமர்  மோடியை  நேரில் சந்தித்து புகார் அளிப்பேன். இவ்வாறு  அவர் கூறினார்.

Tags : Grunapedi ,
× RELATED அமைச்சரவைக்கும், நிர்வாகத்துக்கும்...