×

குடியுரிமை சட்டத்தை கண்டித்து ரயில் மறியல் முயற்சி, ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன. 8: குடியுரிமை சட்டத்தை கண்டித்து திருச்சியில் ரயில் மறியல் முயற்சியில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் யாரேனும் சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால் அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும். இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தை புறக்கணிப்பதாக கூறி அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் நேற்று ஸ்டூடண்ட் இஸ்லாமிக் ஆர்கனைசேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்டத்தலைவர் ரியாஸ் தலைமையில் நேற்று கோஷமிட்டப்படி ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மறித்தனர். இதையடுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30 பேரை கைது செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த மண்டபத்தில் அடைத்தனர். மற்றொரு ஆர்ப்பாட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் தர்வேஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : demonstration ,protest ,
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்