உத்திரமேரூர், ஜன. 8: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமம் சாய்பாபா கோயில் சாலையில் சேஷான் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்தின் பாதுகாப்புக்கு இந்த குளம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. பழங்காலங்களில் இக்குளம் அப்பகுதி மக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியது. இதனை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் குளத்தை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காடுபோல் காணப்படுகிறது. மேலும் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் இந்த குளத்தில் கொட்டப்படுவதால் குளக்கரைகள் தூர்ந்து போனதுமட்டுமின்றி, மாசடைந்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குளத்தின் நீர்வரத்து பாதிக்கப்படுவதுடன் பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கி, அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குளத்தை சுற்றி சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இக்குளம் நாளடைவில் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு திருப்புலிவனம் கிராமத்தில் சீரழிந்து வரும் குளத்தை விரைந்து சீரமைத்து, கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.