×

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பாடம் நடத்தும் கட்டாயம் தடுமாறும் பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப்பள்ளிகளுக்கு அனுப்புவதால்

வேலூர், ஜன.3: உபரி பணியிடம் என்ற பெயரில் தொடக்கப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதில் தகுதியில்லாத இடைநிலை ஆசிரியர்களை வைத்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்துக்கு பாடம் நடத்தும் முடிவு கல்வியில் தமிழகத்தை தடுமாற வைத்துவிடும் என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் முயற்சியால், பாடத்திட்டங்கள் 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக மாற்றப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தமிழக மாணவர்களை அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள வைக்கும் நோக்கத்தில் பாடத்திட்டங்களின் தரம் உயர்த்தப்பட்டது. குறிப்பாக 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மத்திய பாடத்திட்டங்களுக்கு சவால் விடும் நிலையில், அதைவிட சிறப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்- ஆசிரியர் விகிதாச்சார கணக்கின்படி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரி பட்டதாரி ஆசிரியர்களை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணி நிரவல் செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன்படி, தமிழகம் முழுவதும் 2,500 பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு பதில் பதவி உயர்வு என்ற ஒன்று இல்லாமல் அதே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் 3,500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை கொண்டு அப்பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை நடத்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழக பள்ளிக்கல்வி நிலை அதலபாதாளத்துக்கு செல்லும் என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கல்வியாளர்கள் தரப்பில் கேட்டபோது, ‘அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாமல் உள்ளனர். இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், சமூக அறிவியல், தமிழ் ஆகிய பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள். இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் இப்போதுள்ள உலகம் தரம் வாய்ந்த பாடத்திட்டத்தை, குறிப்பாக அறிவியல், ஆங்கிலம், கணிதம் பாடங்களை 6 முதல் 8 வகுப்பிற்கு நடத்த இயலாது. இது இப்போதே பல பள்ளிகளில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அடிப்படை வகுப்புகள் 6 முதல் 8 வகுப்பு மாணவர்கள் கல்வித் தரம் பாதிப்படைவதோடு உயர்கல்வியை பெறுவதில் சிரமம் ஏற்படலாம். என்எம்எம்எஸ் போன்ற தேர்வுகளுக்கு கணிதம், அறிவியல் மிக முக்கியம். இந்த நிைலயில் பதவி உயர்வின்றி இடைநிலை ஆசிரியர்களை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அப்படியே வைத்துக்கொண்டு அங்குள்ள அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களை உபரி என்ற பெயரில் தகுதியிறக்கம் செய்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அனுப்புவது என்ன நியாயம் என்பது தெரியவில்லை. அதனால் பதவி உயர்வின்றி அவதிப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களை அதே நிலையில் நீடிக்க செய்ய வேண்டும்.

அதற்கு பதில் பதவி உயர்வின்றி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணி செய்து வரும் இடைநிலை ஆசிரியர்களை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு மாற்றலாம். இதன் மூலம் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கற்க உகந்த சூழ்நிலையை உருவாக்க முடியும். அதற்கு பள்ளிக்கல்வித்துறையும், அரசும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Secondary school teachers ,high school students ,high school graduate teachers ,elementary schools ,
× RELATED சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு முற்றுகை...