×

கொட்டாரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக, அதிமுக மோதல் போலீஸ் சமரசம்

கன்னியாகுமரி, ஜன.3 : அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து எண்ணப்பட்டன. காலை முதல் விறுவிறுப்பாக இருந்தது. அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய 4 வது வார்டு பதவிக்கு, காங்கிரஸ் சார்பில் ஜெனிதாவும், பா.ஜ. சார்பில் பால்தங்கம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த வார்டு வாக்கு எண்ணிக்கை நடந்த போது. பா.ஜ. வேட்பாளர் பால்தங்கம் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகள் இந்த வார்டு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை கூட்டலில் தவறு நடந்துள்ளது. மேலும் தபால் வாக்குகளும் முறையாக கணக்கில் சேர்க்கப்பட வில்லை. எனவே வாக்கு எண்ணிக்கையை திருப்பி நடத்துமாறு கூறினர். திமுக ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, மதியழகன் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வந்தனர்.
அப்போது அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கவிஞர் சதாசிவம், மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் அழகேசன் ஆகியோரும் அங்கு வந்தனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஒருவரையொருவர் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் போலீசார் அங்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அப்போது திமுக, காங்கிரஸ் தரப்பில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. நாங்கள் இது குறித்து புகார் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். அப்போது அதிமுகவினர் எதிர்த்து கூச்சலிட்டனர். பின்னர் டி.எஸ்.பி. பாஸ்கரன் பேச்சு வார்த்தை நடத்தி, இரு தரப்பு நிர்வாகிகளையும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேற்றினார். இந்த சம்பவத்தால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த வார்டில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து நேற்று இரவு வரை அதிகாரிகள் எதுவும் உறுதியாக அறிவிக்கவில்லை.

Tags : DMK ,clash ,AIADMK ,palace counting center ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...