×

வேலூர் மத்திய சிறையில் 8வது நாளாக முருகன் உண்ணாவிரதம்: சலுகைகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு

வேலூர், டிச.29: வேலூர் மத்திய சிறையில் 8வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவருக்கான சலுகைகள் ரத்து செய்ய ஆலோசிப்பதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முருகனை சந்திக்க வந்திருந்த அவரது உறவினர் கொண்டுவந்த உணவுப்பொருட்களை உள்ளே அனுமதிக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கடந்த 21ம் தேதி முதல் முருகன் வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதன்படி, தொடர்ந்து 8வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்ததாக சிறைத்துறை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மத்திய சிறையில் இருந்து வழங்கப்படும் உணவை வாங்க முருகன் மறுத்து வருகிறார். அவரிடம் இருக்கும் பழங்கள், பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டுள்ளார். இதனால், அவரது உடல்நிலை பலவீனமடையும். எனவே, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மருத்துவரும் முருகனின் உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார். உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முருகன் எந்த மனுவும் அளிக்கவில்லை. இதுபோன்று சிறை நிர்வாகத்தின் விதிகளுக்கு எதிராக செயல்படுவதால் முருகனுக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோர்ட் அனுமதியுடன் நளினி- முருகன் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர். சிறையில் உள்ள சலுகைகள் ரத்து செய்யப்பட்டால், வரும் 4ம் தேதி நடக்கவுள்ள சந்திப்பு ரத்தாகும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Murugan ,Vellore Central Jail ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...