×

மேச்சேரி ஒன்றியத்தில் முதல் கட்ட தேர்தல் மேட்டூர் பாலமலைக்கு ஜீப்பில் அனுப்பப்பட்ட வாக்கு பெட்டிகள்

மேட்டூர், டிச.27:  கொளத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு, வாக்குப்பெட்டிகளும், அதற்கான உபகரணங்களும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கொண்டு செல்லப்பட்டது.
தமிழகத்தில் இன்று ஊரக பகுதிகளுக்கு முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதில், கொளத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் கொண்டு செல்லப்பட்டன. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலமலை ஊராட்சியில் 3203 வாக்காளர்கள் உள்ளனர். சாலை வசதி இல்லாத இந்த மலைகிராமத்திற்கு, 100 நாள் வேலை திட்டத்தில் கடுமையாக உழைத்து மக்களே சாலை அமைத்துக் கொண்டனர்.

கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 3500 அடி உயரத்தில் உள்ள பாலமலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குப் பெட்டிகளும், வாக்குப்பதிவு இயந்திரங்களும் தலைச்சுமையாகவும், கழுதைகள் மீதும் கொண்டு செல்லப்பட்டன. தற்போது ஜீப்புகள் மூலம் அங்குள்ள 3 வாக்குச்சாவடிகளுக்கு, வாக்குப்பதிவு பொருட்களும், வாக்குச் சீட்டுகளும் கொண்டு செல்லப்பட்டன. பாலமலை ஊராட்சியில் 9 பதவிகளுக்கு 18 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mettur Palamalai ,
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா