×

சேலத்தில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட திட்டம் வாக்கு எண்ணும் மையங்களை கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும்

சேலம், டிச.27:  சேலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால், குறுகிய இடம் கொண்ட பள்ளிகளில் இருந்து கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு விதிமீறல், முறைகேடு புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், மேற்பார்வையாளர், தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல் கட்டமாக நடக்கும் தேர்தலில் பதற்றமான வாக்குசாவடிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், கேமரா பொருத்த முடியாது என கலெக்டர் கூறிவிட்டார். அதேபோல், வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுப்பது, விதிமீறலில் ஈடுபடுவது போன்றவை பற்றி புகைப்படத்துடன் புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாக்கு எண்ணிக்கையின் போது, ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். இதற்கு உயர் அதிகாரிகள் துணைபோக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு ஏற்றாற்போல் வாக்கு எண்ணும் மையங்களை எந்த இடவசதியும் இல்லாத பள்ளிகளில் அமைத்துள்ளார்கள். அதிலும், வாக்குப்பெட்டிகளை திறப்பது ஒரு அறையிலும், வாக்கு எண்ணிக்கை நடத்துவது மற்றொரு அறையிலும் என முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது,தில்லு முல்லுக்கு வழிவகுக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது,சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால்,அதற்கு முழுபொறுப்பு மாவட்ட கலெக்டர் தான்.

வாக்கு எண்ணும் மையங்களை அதிக இடவசதி கொண்ட அரசு,தனியார் கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும். இதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பி இருக்கிறோம். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.இதனை பொறுத்துக்கொள்ள முடியாத முதல்வர்,அதிகாரிகளை கொண்டு முறைகேடு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்.அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், அதை மக்கள் வாங்கி வைத்துகொண்டு திமுகவுக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது,எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் உடனிருந்தார்.

Tags : Salem ,AIADMK ,polling centers ,colleges ,
× RELATED நீலகிரி அதிமுக வேட்பாளர் சேலத்தில் வாக்களித்தார்