×

இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு தேவர் சமுதாய அமைப்புகள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நெல்லை, டிச.27: நெல்லை மாநகர போலீசார் முறையாக விசாரணை நடத்தாமல் இளைஞர்கள் மீது பொய்வழக்கு போடுவதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேவர் சமுதாய அமைப்பினர் மனு அளித்தனர். அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழகம் மூர்த்திதேவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் இசக்கிராஜா, நேதாஜி சுபாஷ் சேனை மகாராஜன், தமிழ்நாடு தேவர் பேரவை கார்த்திக், அகில இந்திய பார்வர்டு பிளாக் ராம்குமார் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாநகர போலீசார் எங்களது இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் திடீர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது, எங்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக சில அமைப்புகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறோம். எங்கள் சமுதாயத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேறி வருகின்றனர். சமுதாய வளர்ச்சியை தடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இளைஞர்கள் மீது மாநகர போலீசார் பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். இதனை கைவிட வேண்டும். விசாரணை நடத்தாமலேயே தொடர் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரித்து பொய்வழக்கு பதிவு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நெல்லை பேட்டை கண்டியபேரியில் நடந்த கொலை தொடர்பாக எங்கள் சமுதாய இளைஞர்கள் மீது முறையான விசாரணையின்றி வழக்குபதிந்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள்  தெரிவித்தனர்.

Tags : teenagers ,organizations ,collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...