×

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 300 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும்

சென்னை, டிச.22:கோதாவரி ஆற்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 1,100 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை கிருஷ்ணா, பெண்ணயாறு, காவிரி வடிநிலங்களுக்கு திசை திருப்பி விடுவதன் மூலம் தமிழகத்தில் நீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்பதால், கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணையாறு-காவேரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. ₹60 ஆயிரம் கோடி செலவில் உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி கடன் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் 247 டிஎம்சியை திருப்பி விட முடியும். இதில், தமிழகத்தில் 83 டிஎம்சி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் தேசிய மேம்பாட்டு முகமை அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு தேசிய நீர் மேம்பாட்டு முகமை வரைவு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்த திட்டத்தில், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு திருப்பி விடப்படும் 247 டிஎம்சி நீரில் கர்நாடகா மாநிலத்துக்கு ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. இதனால், கர்நாடகா மாநிலம் சார்பில் இந்த திட்டத்தில் தங்களுக்கு நதி நீர் பங்கீட்டு தர வேண்டும் என்று தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடகா மாநிலம் அளித்துள்ள பதிலில், கோதாவரி நதி நீர் நடுவர் மன்றம், கிருஷ்ணா நதிநீர் நடுவர் மன்றம் தீர்ப்புகளின் படி கோதாவரியில் இருந்து கிருஷ்ணா, காவிரி , பெண்ணையாறு வடிநிலப்பகுதிகளில் கிடைக்கும் நீரில் கர்நாடகா மாநிலத்துக்கு பங்கு உள்ளது. அதே நேரத்தில் கோதாவரி-காவிரி  இணைப்பு திட்டத்தின் கீழ் கர்நாடகாவுக்கு நீர் பங்கீடு அளிக்க வேண்டும். கர்நாடகா அரசிற்கு வழங்க வேண்டிய நீரை ஒதுக்கீடு செய்து விட்டு தான் இந்த திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்த வேணடும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு இந்த வரைவு அறிக்கையில் பல்வேறு திருத்தங்கள்கோரி தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது.
அதன்படி கோதாவரியில் இருந்து திருப்பி விடப்படும் நீரை வரைவு அறிக்கையில் கூறியுள்ளபடி கல்லணையில் இணைப்பதற்கு பதிலாக மாயனூரில் உள்ளகட்டளை கதவணையில் இணைக்க வேண்டும். கட்டளையில் இணைத்தால்தான் அந்த நீரை வைகை, குண்டாறுவிற்கு திருப்பி விட முடியும். தமிழகத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள 83 டிஎம்சி நீரை 300 டிஎம்சி நீராக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஆந்திராவில் உள்ள ஆரணியாறு நீர்த்தேக்கத்தை தமிழ்நாட்டில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்துடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் 609 குளங்களில் 15 டி.எம்.சி. நீரை நிரப்ப முடியும்.அப்படி நிரப்பும் பட்சத்தில் சென்னையின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
டெல்டா பகுதிகளில் பயிர்களின் நீர் கட்டு அளவு 0.72மீ என்று வரைவு அறிக்கையில் கூறியிருப்பது மிகக் குறைவு. காவிரி  நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறுவை பயிரின் நீர் கட்டு அளவு 1.22மீட்டராகவும், சம்பா பயிரின் நீர் கட்டு அளவு 1.04 மீட்டராகவும் நிர்ணயித்துள்ள நிலையில் 0.72மீ இருக்க வேண்டும் குறைக்கக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
ஏற்கனவே, கர்நாடகா தங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் 300 டிஎம்சி நீர் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி இருப்பது தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து பதிலுக்காக அந்த முகமை காத்திருக்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...