×

சிவப்பு கார்டு இல்லாத நோயாளிகளுக்கு ஜிப்மரில் ஏப்ரல் 1ம்தேதி முதல் உயர் சோதனைகளுக்கு கட்டணம் * ₹500 முதல் ₹12 ஆயிரம் நிர்ணயம்

புதுச்சேரி,   மார்ச் 24: உயர் ரக   சிகிச்சைகளுக்கு வரும் ஏப்ரல் 1 முதல் கட்டணம் வசூலிக்கப் போவதாக ஜிப்மர்   மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவமனையின் அனைத்து துறை தலைவர்களுக்கு அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது: ஜிப்மரில்  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு   விசாரணைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. “ஆயுஷ்மான் பாரத்”   மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன்   கார்டு (புதுச்சேரிக்கானது) இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு   கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்படும். அத்தொகை நிறுவன வருவாய்   கணக்கில் துறைகள் வரவு வைக்க வேண்டும். நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக   மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இருப்பினும் இந்த   மேம்பட்ட சோதனைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடமிருந்து ஓரளவு   வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும்.   அடிப்படை பரிசோதனை சேவைகளை இலவசமாக தரப்படும்.

 வரலாற்று நோயியல்   ஆய்வுகள் முடிவுப்படி மருத்துவ தேவை மற்றும் சாத்தியக்கூறு ஆகியவற்றின்   அடிப்படையில் மேம்பட்ட சாதனைகள் விரும்பத்தக்கவை என்று மருத்துவ துறை   கருதினால், துறையானது அதை நோயியல் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.  அப்போது   காப்பீட்டு நகல் அல்லது சிவப்பு ரேஷன் கார்டு நகல் இணைக்க வேண்டும்.   அவ்வாறு இல்லாதவர்கள் பணம் செலுத்திய ரசீது நகலுடன் சம்பந்தப்பட்ட சிகிச்சை   தரும் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். ரசீது இல்லாவிட்டால் சிகிச்சை   தரப்படாது என்பதை நோயாளிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென   குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 வகையான உயர் சிகிச்கைளுக்கு கட்டணம்   நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.12 ஆயிரம் வரை   இக்கட்டணம் இருக்கிறது.  ஏற்கனவே புதுச்சேரி மற்றும் தமிழகத்தை   சேர்ந்தவர்களுக்கு ஜிப்மரில் சரிவர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற   குற்றச்சாட்டு பரவலாக உள்ள நிலையில், 63 வகை உயர் சிகிச்சைகளுக்கு தற்போது   கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : JIPMAR ,
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...