×

காவிரியில் இருந்து பஞ்சப்பட்டி ஏரி்க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றாத அதிருப்தி உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்

கரூர், டிச. 18: பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்றாத அதிருப்தி உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று கருர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரி. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இதுதான் மிகப் பெரிய ஏரியாகும். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பஞ்சப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு 1217 ஏக்கர். உயரம் 44 அடி. கரையின் நீளம் 2050 மீட்டர். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலத்தடி நீரை சேமிக்கின்ற வகையில் ஏரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பருவ மழை பொய்த்ததால் இந்த ஏரி வறண்டுபோய் சீத்தை மரங்கள் முளைத்து காடுபோல காட்சியளிக்கிறது. சீத்தை மரங்கள் அவ்வப்போது பெய்கின்ற மழைநீரையும் உறிஞ்சி விடுகிறது. இதனால் நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிர் செய்யவோ, கால்நடைகளை வளர்க்கவோ இயலாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு செல்லும் நிலை உள்ளது. விவசாய வேலை செய்தவர்கள் வேறு பிழைப்புத்தேடி கரூர் நோக்கி வரும் நிலைமை இருக்கிறது.
பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், வயலூர், சிந்தலவாடி, உள்ளிட்ட 23 கிராம ஊராட்சிகள் இந்த ஏரி நீரை நம்பி உள்ளன. 25 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. காவிரியாற்றில் சேமிக்க முடியாமல் வீணாகும் நீரையும், பெருவெள்ளம் வரும்போது உபரிநீரையும் காவிரியாற்றில் இருந்து 20 கிமீட்டர் தூரமே உள்ளஇந்த ஏரிக்கு கொண்டுவர வேண்டும் என்பது கடந்த 10ஆண்டுகளாக மக்களால் வலியுறுத்தப்படும் கோரிக்கையாக உள்ளது.

கடந்த ஆண்டு காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் நீரை சேமிக்க முடியாமல் 2 லட்சம் கன அடி நீர் வரை வீணானதையடுத்து இந்த கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.இந்த ஆண்டும் தொடர்ந்து காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனினும் நீரை சேமிக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை. மேலும் இப்பகுதி ஒன்றிய பள்ளி மாணவர்கள் நீரை சேமிக்க திட்ட அறிக்கை அளித்து பரிசும் பெற்றனர். எனினும் அதனையும் நிறைவேற்றவில்லை. லாலாப்பேட்டை காவரியாற்றில் தடுப்பணை கட்டினால் காவிரியாறு மட்டத்தை விட17 மீட்டர் உயரமாக உள்ள பஞ்சப்பட்டிக்கு தண்ணீர் வரும்.இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 20 ஆயிரம் டன் அளவுக்கு மீன் உற்பத்தி செய்யலாம். ஏரியின் வெளிப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் உள்ளதால் பறவைகள் சரணாலயம், பூங்கா அமைத்து படகு குழாம் அமைப்பதன் மூலமாக சுற்றுலாத்தலமாகவும் ஆக்க இயலும்.தேசிய அளவிலான மாநாட்டிற்கு ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும், ஆளும்கட்சிக்கு எதிரான இந்த அதிருப்தி உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : non-implementation ,Cauvery ,Panchapatti Lake ,elections ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை...