×

தேக்கடியிலிருந்து மேகமலைக்கு இடம் பெயர்ந்த வனவிலங்குகள்

தேனி, டிச. 17: தேக்கடி புலிகள் சரணாலயத்தில் இருந்து யானை, புலி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் மேகமலைக்கு இடம் பெயர்ந்துள்ளதால், அப்பகுதியில் சுற்றுலா செல்பவர்களும், வனத்தை ஒட்டிய கிராமங்களில் வசிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேக்கடி புலிகள் சரணாலயமும், மேகமலை வனப்பகுதியில் அடுத்தடுத்து இணைந்து ஒரே தொடராக அமைந்துள்ளது. பொதுவாக வனத்திற்குள் மனித நடமாட்டம் தெரிந்தால் வனவிலங்குகள் அந்த பகுதியில் இருந்து விலகிச் சென்று விடும். இதனையும் மீறி வனவிலங்குகளிடம் வம்பு வைத்தவர்களை வதம் செய்யாமல் விடாது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால், தேக்கடி புலிகள் சரணாலய பகுதிகளில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் இப்பகுதியில் வசிக்கும் யானைகள், புலிகள், செந்நாய்கள், மான்கள் உள்ளிட்ட பல வகையான விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் மேகமலை பகுதியில் இடம் பெயர்ந்து விடும். இங்குள்ள விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவைகளுக்கு இடையே மோதலும் ஏற்படும். தவிர உணவு, குடிநீர் தேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக அவைகள் வனத்தை ஒட்டிய எல்லைப்பகுதிக்குள் உலா வரும். இது போன்ற நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்கும் வர வாய்ப்புகள் உள்ளது. சுற்றுலா செல்பவர்களுக்கு எதுவரை பாதுகாப்பான பகுதி என்பதை வனத்துறை வரையறுத்து வைத்துள்ளது. அந்த எல்லையை தாண்டி வனத்திற்குள் செல்ல வேண்டாம். இப்படி சென்றால் வனவிலங்குகளிடம் சிக்க வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற நெருக்கமான வனவிலங்குகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் போது வேட்டைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இதனைத் தடுக்க வனத்துறை சிறப்பு ரோந்து படைகளை அமைத்துள்ளது. இந்த படையினர் 24 மணி நேரமும் வனத்தை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். வேட்டைக்காரர்கள் சிக்கினால் சிறை செல்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு கூறினர்.

Tags : Thekkady ,Meghamalai ,
× RELATED தேக்கடி மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு