×

ஓமலூர், காடையாம்பட்டி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து கூட்டணி கட்சியினர் மனு தாக்கல்

ஓமலூர், டிச.17: ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக கூட்டணியில் முறையான வார்டு ஒதுக்கீடு இல்லை என்று கூறி பாஜக, தமாகா மற்றும் கூட்டணி கட்சிகள் அதிமுக போட்டியிடும் வார்டுகளிலும் அவர்களை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், திமுக, அதிமுக, தேமுதிக,பாஜக, தமாகா, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஓமலூர் ஒன்றியத்தில் திமுக, அதிமுகவினர் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் ஒன்றிய அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள 27 ஒன்றிய கவுன்சிலர், 3 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுகதரப்பில் 17 ஒன்றிய வார்டுக்கும், 2 மாவட்ட வார்டுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓமலூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவை எதிர்த்து அதன் கூட்டணி கட்சிகளான தமாகா 10 ஒன்றிய வார்டு, 2 மாவட்ட வார்டு, தேமுதிக5ஒன்றிய வார்டு, ஒரு மாவட்ட வார்டு,பாஜக ஒரு ஒன்றிய வார்டு, பாமக 10 ஒன்றிய வார்டு, ஒரு மாவட்ட வார்டு என வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 19 ஒன்றிய கவுன்சிலர், 2 மாவட்ட கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இதில், அதிமுக 15 ஒன்றிய வார்டுகளில் போட்டியிடுகிறது. இதில், அதிமுகவை எதிர்த்து பிஜேபி 10 ஒன்றிய வார்டுகள், 2 மாவட்ட வார்டுகள், தேமுதிக 10 ஒன்றிய வார்டுகள், 2 மாவட்ட வார்டுகள், தமாகா 10 ஒன்றிய வார்டுகள், 2 மாவட்ட வார்டுகள், பாமக 8 ஒன்றிய வார்டுகள், ஒரு மாவட்ட வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 13 ஒன்றிய வார்டுகளில், ஒரு மாவட்ட வார்டுகளுக்கு அதிமுக ஒன்றிய 8 வார்டுகள், ஒரு மாவட்ட வார்டில் போட்டியிடுகிறது. இதில், அதிமுகவை எதிர்த்து பாஜக 5 ஒன்றிய வார்டு, ஒரு மாவட்ட வார்டு, தமாகா 10 ஒன்றிய வார்டு, ஒரு மாவட்ட வார்டு, பாமக 12 ஒன்றிய வார்டு,ஒரு மாவட்ட வார்டு என வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோன்று அதிமுகவில் சீட் கிடைக்கவில்லை என்று அதிமுகவை சேர்ந்த பலரும் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அதிமுக மாவட்ட தலைமை மீது கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைமைகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், இது தேர்தல் களத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கடைசி நாள் என்பதால் ஓமலூர் ஒன்றியத்தில் ஒன்றிய குழு வார்டுகளுக்கு 212 பேரும், மாவட்ட ஊராட்சி குழு வார்டுகளுக்கு 32 பேரும், ஊராட்சி தலைவருக்கு 238 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 1243 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : AIADMK ,unions ,Kadayampatti ,Omalur ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...