×
Saravana Stores

குமரி மலைச்சரிவுகளில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து வளர்க்கலாம் அதிக லாபம் தரும் கிராம்பு சாகுபடி

நறுமண பயிர்களில் முக்கியமானது கிராம்பு. மலைப்பாங்கான இடத்தில் இந்த கிராம்பு செடிகள் செழிப்பாக வளர்கின்றன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி, ஏற்காடு, திருநெல்வேலி மற்றும் கீழ்பழனி மலைப்பகுதிகளில் கிராம்பு பயிரிடப்படுகிறது. வெப்பமண்டலப் பயிரான கிராம்பு நல்ல வெதுவெதுப்பான ஈரப்பதமுள்ள சூழ்நிலையில் நன்கு வளரும். மழையளவு ஆண்டிற்கு 150-200 செ.மீ வரையிலும் தேவை. வெப்பநிலை 20லிருந்து 30 டிகிரி செல்சியஸ், கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும். நல்ல வடிகால் வசதி கொண்ட ஈரம் காக்கும் தன்மை கொண்ட இலைமக்கு நிறைந்த மணல் கலந்த களிமண், கிராம்பு சாகுபடி செய்ய மிகவும் ஏற்றது. கிராம்பை விதை மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இதைத் தவிர பதியன் மூலமும், மென்திசு ஒட்டு முறையிலும் உற்பத்தி செய்யலாம். இதனை சாகுபடி செய்ய ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஏற்ற மாதங்கள் ஆகும்.  ஒரு வயது இளஞ்செடிகளுக்கு, செடி ஒன்றிற்கு 15 கிலோ மக்கிய தொழு எரு, தழைச்சத்து 20 கிராம், மணிச்சத்து 20 கிராம், சாம்பல் சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை ஜூன் அல்லது ஜூலை மாதத்திலும், மற்றொரு பகுதியை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் இடவேண்டும். பின்னர் சிறிது சிறிதாக உர அளவுகளை அதிகரித்து 7 வயதான மரம் ஒன்றிற்கு தொழு எரு 50 கிலோ, தழைச்சத்து 300 கிராம், மணிச்சத்து 300 கிராம் மற்றும் சாம்பல் சத்து 960 கிராம் கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும். உரம் போட்ட ஒரு மாதம் கழித்து, 50 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இடவேண்டும். மழை இல்லாத காலங்களில் இளஞ்செடிகளுக்குத் தேவை ஏற்படும் போது நீர் பாய்ச்சுவது அவசியம் ஆகும்.  வளர்ந்த மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதால் காய்ப்புத்திறன் அதிகரிக்கும். ஜனவரி முதல் மே மாதம் வரை சொட்டு நீர் மூலமாக அல்லது பாத்திகள் மூலமாக நீர் பாய்ச்சுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு சுமார் 8 லிட்டர் அளவில் நீர் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். கிராம்பு மரத்தில் அதிக பக்கக் கிளைகள் தோன்றும். எனவே தக்க நேரத்தில் கவாத்து(வெட்டி) செய்யவேண்டும். மரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் களையெடுத்து காய்ந்த இலைச்சருகுகளை மேலாகப் பரப்பி மண்ணின் ஈரத்தைக் காக்கவேண்டும். கிராம்பு மரம் தண்டுத்துளைப்பான், கருப்பு செதில்பூச்சி, சிவப்பு வேரழுகல் நோய், இலைப்புள்ளி நோய், திடீர் மடிவு நோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறது. தண்டுத்துளைப்பானால் பாதிக்கப்படும்போது, இரண்டு கிராம் கார்பரில் நனையும் தூள் 50 சதத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, பாதிக்கப்பட்ட தண்டுப்பகுதியில் தடவி விடவேண்டும். ஒரு லிட்டர் நீரில் 1 மிலி குயினால்பாஸை துளையில் ஊற்ற வேண்டும். ஒரு மரத்திற்கு 60 கிராம் போரேட்டை மண்ணில் இட வேண்டும். கிராம்பில் கருப்பு செதில்பூச்சியும் தாக்கும். இந்த பூச்சியை ஒரு லிட்டர் நீரில் மோனோகுரோட்டோபாஸ் 1.5 மிலி அல்லது டைமிதோயேட் 1 மிலி கலந்து தெளிக்கவேண்டும். சிவப்பு வேரழுகல் நோய் தாக்கிய மரங்களை வேரோடு தோண்டி அழிக்கவேண்டும். நோய் தாக்கிய மரத்தின் அருகில் ஒரு சதவீத போர்டோக்கலவையை 5 லிட்டர் வீதம் ஊற்றவேண்டும்.இலைப்புள்ளி நோயை சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் 0.2 சதவீதம், லாசோனியா இலை சாற்றினை 5 சதவீதம் கலந்து பருவத்திற்கு முன்பு தெளிக்கவும் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடை 0.25 சதவீதம் தெளிக்க வேண்டும். திடீர் மடிவு நோய் கிராம்பு மரத்தினைத் தாக்கும் மிக முக்கியமான நோய் ஆகும். பாதிக்கப்பட்ட மரங்கள் திடீரென்று காய்ந்து விடும். நீண்ட காலத்திற்கு ஏற்படும் வறண்ட சூழ்நிலையும், மழையினால் ஏற்படும் நீர்த்தேக்க நிலையும், வேர்களை நலிவடையச் செய்வதால் இந்நோய் ஏற்படுகிறது. கார்பென்டாசிம் அல்லது மான்கோசெப் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகம் நன்கு நனையும்படி ஊற்றவேண்டும். வாடிக் கொண்டிருக்கும் மரங்களுக்கு நிழல் கொடுத்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். மலைப்பகுதி சரிவுகளில் சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது மிகுந்த பலன் தரும். மரத்தைச் சுற்றி இலைச் சருகுகளைப் பரப்பி மண்ணின் ஈரத்தைப் பாதுகாக்க வேண்டும். தோட்ட எல்லைப் பகுதியில் விரைவாக வளரக்கூடிய காற்றுத் தடை மரங்களை வளர்க்கவேண்டும். இவ்வாறு கிராம்பு மரங்களை பாதுகாத்தால் வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு 2 முதல் 3 கிலோ உலர்ந்த கிராம்பு கிடைக்கும். இதன் மூலம் நல்ல லாபமும் பெறலாம். என தோட்டக்கலைதுறை துணை இயக்குநர் ஷீலா ஜாண் தெரிவித்துள்ளார்.பலன் தரும் காலம்கிராம்பு நட்ட 7 அல்லது 8 ஆண்டுகளில் பலன் தரத்தொடங்கும். பூக்கள் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை தோன்ற ஆரம்பிக்கும். பூ பூத்த 4 அல்லது 6 மாதங்களில் மொட்டுகள் பச்சையிலிருந்து இளம் சிவப்பு நிறமாக மாறும் பொழுது, அதே சமயம் பூக்கள் இதழ் விரியத் தொடங்குவதற்கு முன்னர் பறிக்கவேண்டும். கொத்து கொத்தாகத் தோன்றும் மொட்டுக்களை கைகளினால் அறுவடை செய்யவேண்டும். அறுவடைக்கு அடுத்த நாள் இளம் வெயிலில் 4 அல்லது 5 நாட்கள் நன்கு உலரும் வரை காய வைக்கவேண்டும். நாற்று தயாரிக்கும் முறைநன்கு பழுத்த பழங்களை அறுவடை செய்து, 12 மணி நேரம் தண்ணீரில்  ஊறவைத்து, சதைப் பகுதியை அகற்றிவிட்டு விதைகளைப் பிரித்தெடுக்கவேண்டும்.  அறுவடை செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் விதைகள் அவற்றின் முளைப்புத்  திறனை இழந்துவிடும். எனவே உடனே விதைக்கவேண்டும்.  நிழற்பாங்கான இடங்களில்  உயர்ந்த மேட்டுப்பாத்திகள் அமைத்து பாத்திகளில் 2.5 செ.மீ ஆழத்திலும், 12  முதல் 15 செ.மீ இடைவெளியில் விதைகளை விதைக்கவேண்டும். விதைகள் 5 முதல் 6  வாரங்களில் முளைத்துவிடும். செடிகள் மெதுவாக வளரத் தொடங்கும். போதிய அளவு  நீர் விட்டுப் பாதுகாக்கவேண்டும். கன்றுகளை நாற்றங்காலில் ஆறுமாத காலம்  வைத்திருக்கவேண்டும். பிறகு நாற்றுங்காலைத் தொழு எரு, மண் மற்றும் மணல் சம  அளவில் நிரப்பிய 35×22 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் நட்டு இரண்டு  வருடம் வரை பாதுகாக்க வெண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட நாற்றுக்களை  நடவிற்கு உபயோகப்படுத்தவேண்டும்.நடவு செய்யும் முறை30 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை 6 மீட்டர் இடைவெளியில் எடுத்து,  ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ மக்கிய தொழு உரம், 50 கிராம் அசோஸ்பைரில்லம்  இட்டு, குழிகளின் மத்தியில் செடிகளை நடவேண்டும். நட்டவுடன்  வேர்ப்பகுதிகளில், மழைநீர் தேங்காமல் நல்ல வடிகால் வசதி செய்யவேண்டும். நாற்றங்காலுக்கு நிழல்  அவசியம் ஆகும்.  எனவே இளஞ்செடிகளுக்கு ஆரம்பகாலத்தில் சிறு பந்தல் அமைத்தும், வாழை பயிரிட்டும்  நிழல் ஏற்படுத்திக் கொடுக்கலாம். கிராம்புக்கு என்று ரகம் இல்லை. கிராம்பு செடி நடவு செய்யும்போது நல்ல செழிப்போடு வரும். கிராம்பு செடியில் இருந்து காய்களை பறித்து நடவு செய்யவேண்டும். ஒன்றியம் வாரியாக சாகுபடிகுமரி மாவட்டத்தில் மொத்தம் 783 ஹெக்டேர் நிலப்பரப்பில் கிராம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குருந்தன்கோடு ஒன்றியத்தில் 3 ஹெக்டேர், மேல்புறம் ஒன்றியத்தில் 8 ஹெக்டேர், தக்கலை ஒன்றியத்தில் 44 ஹெக்டேர், திருவட்டார் ஒன்றியத்தில் 391 ஹெக்டேர், தோவாளை ஒன்றியத்தில் 337 ஹெக்ேடர் என மொத்தம் 793 ஹெக்டேர் பரப்பளவில் கிராம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது….

The post குமரி மலைச்சரிவுகளில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து வளர்க்கலாம் அதிக லாபம் தரும் கிராம்பு சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Kumari ,Tamil Nadu ,Kanyakumari ,Nilgiris ,Yercaud ,Kumari hill ,
× RELATED குமரி தக்கலை அருகே டபுள் கேம் ஆடியதாக...