சென்னை:தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் விழுப்புரம் மண்டலத்தில் கடந்த 2000 மே 4ம் தேதி ஓட்டுநராக பணியில் சேர்ந்தவர் விழுப்புரம் சாலமேடு கிராமத்தை சேர்ந்த லட்சுமிபதி. இவர் 2018 மே 31ம் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. இதையடுத்து, ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லட்சுமிபதி ஓய்வு பெற்ற நாளில் இருந்து 7 சதவீத வட்டியுடன் 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு கடந்த 2023 ஜூலை 27ல் உத்தரவிட்டது. ஆனால், லட்சுமிபதிக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. இதையடுத்து, லட்சுமிபதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே இந்த நீதிமன்றத்தின் மனுதாரருக்கு அவர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 7 சதவீத வட்டியுடன் அவரது ஓய்வூதிய பலன்களை நவம்பர் 20ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநரை நீதிமன்றத்தில் வரும் 22ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என்று உத்தரவிட்டார்.
The post டிரைவருக்கு ஓய்வூதிய பலன் தரவில்லையென்றால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்: போக்குவரத்து கழக எம்.டி.க்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.