தேன்கனிக்கோட்டை, டிச.13: கெலமங்கலம் அருகே 50 யானைகள் அட்டகாசம் செய்து ராகி, நெல் வயல்களை நாசப்படுத்தியது. இந்த யானைகளை விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு தாவரகரை, நொகனூர், மரகட்டா, ஏணி முச்சந்திரம், லக்கசந்திரம், மாரசந்திரம், ஜார்கலட்டி சீனிவாசபுரம், பூதுக்கோட்டை, ஏணிமுச்சந்திரம், மேகலகவுண்டனூர், திம்மசந்திரம், காடுலக்கசந்திரம் ஆகிய கிராமங்களில் ராகி, தக்காளி, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்து வந்தன. வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியதில் ஓசூர் அருகே சானமாவு, ராயக்கோட்டை அருகே ஊடேதுர்கம் பகுதிக்கு இடம் பெயர்ந்தன.இதை தொடர்ந்து அங்கு காலை, மாலையில் வனத்துறையிரன் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கெலமங்கலம் அருகே ஊடேதுர்கம் காப்புகாட்டில் முகாமிட்டிருந்த 50 யானைகள் நெருப்புகுட்டை, காடு உத்தனப்பள்ளி, அஞ்செட்டிதுர்கம், தேன்துர்கம், ஜெக்கேரி ஆகிய கிராமங்களில் புகுந்து இங்கு அறுவடைக்கு தயாராக இருந்த ராகி மற்றும் நெல் வயல்களில் புகுந்து தின்று நாசம் செய்துள்ளன. இதை நேற்று காலை விவசாயிகள் பார்த்து வேதனை அடைந்தனர். இதை தொடர்ந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டத்தை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.