×

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்

மேட்டூர், டிச.5: மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்களால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.மேட்டூர்  அணையின் இடது கரையில், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு அமைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால், காவிரியில்  கூடுதலாக வரும் தண்ணீரை, அணை பாதுகாப்பு கருதி உபரிநீர் போக்கியில்  திறப்பது வழக்கம். நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  அடுத்தடுத்து 4 முறை நிரம்பியது.   தொடர்ந்து 120 அடியாக  நீர்மட்டம் நீடிக்கிறது. தண்ணீர் கடல்போல் தேங்கியுள்ள நிலையில், காவிரி கரையில் பச்சை நிறத்தில் பாசி படர்ந்து கடும்  துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது உபரிநீர் போக்கி பகுதியில் தண்ணீர்  பச்சை நிறமாக மாறி, கடும் துர்நாற்றம் வீசுவதால் தங்கமாபுரிபட்டணம்,  தொட்டில்பட்டி, சேலம் கேம்ப் ஆகிய பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

 மேலும், உபரிநீர் போக்கி கால்வாயில் தேங்கியுள்ள தண்ணீரில் அரஞ்சான், திலேபி வகை மீன்கள் அதிக அளவில் இறந்து  மிதக்கின்றன. மீன்கள் பச்சை நிற படலம் காரணமாக இறந்து மிதக்கின்றனவா,  அல்லது வேறு காரணமா என தெரியவில்லை. இதுகுறித்து மீன்வளத்துறையும்,  மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து, மீன்களை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையானால் மீன்வளம் முற்றிலுமாக அழிந்து  போகும் அபாயம் உள்ளது என மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் தெரிவித்துள்ளனர்.

Tags : Mettur Dam ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!