விக்கிரவாண்டியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க புதிய கருவி

விக்கிரவாண்டி, டிச. 4: விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை திருட்டைதடுக்க நுகர் அதிர்வெண் அடையாள  கருவி துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் குந்தவி தேவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்எம்ஓ கதிர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். விழாவில் கல்லூரி முதல்வர் குந்தவி தேவி கூறுகையில், நமது மருத்துவமனையில் ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில்  நுண் அதிர்வெண் கருவி அமைக்கப்பட்டுள்ளது.மகப்பேறு பிரிவில் குழந்தை பிறந்தவுடன், குழந்தை, தாய், உதவியாளர் விவரங்களை ஐஎம்எஸ் ஆப்பில் சேமித்து , தனித்தனியே குழந்தைக்கும், தாய்க்கும், உதவியாளருக்கும் குறியீட்டு அட்டை (டேக்) அணிவிக்கப்படும். வார்டிலிருந்து இந்த டேக் அணிந்து குழந்தையை வெளியே எடுத்து செல்லும் போது வார்டு முன் நுழைவு பகுதியிலுள்ள ஆன்டெனா மூலம் சென்சார் செய்யப்படும். டேக் அணிந்து செல்லும் போது எச்சரிக்கை அலாரம் ஒலிக்காது. டேக் அணியாதவர்கள், செவிலியர்கள் கூட குழந்தையை வார்டை விட்டு  வெளியே தூக்கி வந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பி அனைவரின் கவனத்தை திசை திருப்பும். மேலும் குழந்தை, தாய், உதவியாளர் புகைப்படமும் இங்குள்ள வீடியோ மானிட்டரில் தெரியும். வேறு நபர்கள் வார்டின் உள்ளே நுழைந்தாலும் தாய், குழந்தையின் நகர்வுகளை கண்காணிக்க இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார் .

Related Stories: