ஈரோடு, நவ.27: ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர்.பின்னர் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் பேசியதாவது:கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில், கிளை வாய்க்கால்கள், கொப்பு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு செய்து தண்ணீர் வருவதில் ஏதாவது பிரச்னை இருந்தால் நானே சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதற்கு பிறகு தான் உத்தரவு போடுகிறேன்.
பெரிய அளவிலான பிரச்னை இருந்தால் நானே நேரில் வந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். கொப்பு, கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓ வழங்கிய உத்தரவை எதிர்த்து மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் முறையிட முடியாது.
இதுதொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டால் இந்த வழக்கு ரத்தாகும். உயர்நீதி மன்றத்தில் தான் முறையிட முடியும். உங்களின் குறைகள் ஏதாவது இருந்தால் தனிப்பட்ட முறையிலும் என்னிடம் தெரிவிக்கலாம். சாயக்கழிவுநீர் பிரச்னையை பொருத்தவரை கடந்த வாரத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ வந்தது. இதையடுத்து, அந்த வீடியோவை எனக்கு அனுப்பிய கலெக்டர் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தேன். ஆனால், அந்த வீடியோவில் உள்ளது போல எதுவும் இல்லை. வீடியோ குறித்து விசாரித்தபோது 6 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என தெரிய வந்தது. இருப்பினும், அந்த பகுதி மட்டுமின்றி அருகில் உள்ள பகுதிகளிலும் ஆய்வு செய்தேன். அதில் சிறு தவறுகள் செய்தது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து 2 ஆலைகளின் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக சென்று கோரிக்கைகளை ஆய்வு செய்து அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதி, 15 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பளவை கொண்டுள்ளது. ஆனால் தற்போது அந்த பகுதிகளில் செங்கல் சூளை, வீட்டுமனைகள் என விவசாய பரப்பளவு குறைந்து வருகிறது. இதுதொடர்பாக, ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளேன். மற்ற பாசன பரப்புகளையும் இந்த வாய்க்கால் பாசன பகுதியில் சேர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.