×

வீரகனூர் பகுதியில் விளைநிலங்களில் புகுந்து வனவிலங்குகள் அட்டகாசம்

கெங்கவல்லி, நவ.26: வீரகனூர் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கெங்கவல்லி வட்டம், வீரகனூர் பேரூராட்சி 14வது வார்டு, சொக்கனூர் மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சுமார் 1000 எக்டேர்  பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம், தீவனச் சோளம், பருத்தி, நெல், மரவள்ளிக்கிழங்கு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து பராமரித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் விளைச்சல்  மற்றும் அறுவடை நேரத்தில், வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘காட்டுப்பன்றிகள், மான் மற்றும் முயல் உள்ளிட்ட விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. அறுவடை நேரத்தில் பயிர்களை முற்றிலும் அழித்து சேதப்படுத்தி, பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. நில பத்திரங்கள் மற்றும் வீட்டிலுள்ள பெண்களின் நகைகளை  அடகு வைத்து விவசாயம் செய்து, விளைச்சலை அறுவடை செய்யும் நேரம் பார்த்து வனவிலங்குகள் வயலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது ஆண்டுதோறும் நீடித்து வருகிறது. எனவே, விவசாய தோட்டத்திற்குள் வனவிலங்குகள் நுழைவதை கட்டுப்படுத்த, நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Veeraganur ,area ,
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது