ரவுண்டானா அமைக்கப்படாததால் போக்குவரத்து நெருக்கடியால் திணறும் புளியங்குடி-சிந்தாமணி பகுதிகள்

புளியங்குடி நவ. 26: சிந்தாமணி டோல்கேட் பகுதியில் முறையாத ரவுன்டானா அமைக்கப்படாததால் புளியங்குடி- சிந்தாமணி பகுதிகள் போக்குவரத்து நெருக்கடியால் திணறுகின்றன. மேலும் இங்கு நிலவும் விபத்து அபாயத்தாலும், சாலையை கடந்துசெல்ல முடியாமலும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிப்படுகின்றனர்.  புளியங்குடி அடுத்த சிந்தாமணி டோல்கேட் பகுதியானது நான்கு வழி பாதை கொண்டது.கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, தென்காசி- சங்கரன்கோவில் பாதை, சிந்தாமணி நகருக்கு செல்லும் பாதை, சிந்தாமணி பஸ்  நிலையத்திற்கு செல்லும் பாதை என நான்கு வழிகளை கொண்டது. இந்த 4 வழிகளிலும் எப்போதும் வாகனங்கள் போக்குவரத்துக்கு பஞ்சமிராது. இத்தகைய பரபரப்பு மிக்க சிந்தாமணி பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில்  6 பள்ளிகளும் ஒரு தனியார் மருத்துவமனையும் உள்ளது. இந்த 6 பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி புளியங்குடியில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் சிந்தாமணி நகருக்குள் மாணவர்களை காலையிலும், மாலையிலும் ஏற்றி, இறக்குவதற்கு வருகிறது. அரசு பஸ்சில்  வரும் மாணவர்களும் நடந்து வரும் மாணவர்களும், சைக்கிளில் வரும் மாணவர்களும் சாலையை கடக்க முடியாமல் பல நிமிடங்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரவுன்டானா அமைத்து போக்குவரத்து சிக்னல் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து சிந்தாமணியில் செயல்படும் தனியார் பள்ளி நிர்வாகியான சுபாஷ் கண்ணா கூறுகையில், ‘‘எங்களது அறக்கட்டளை சார்பில் சிந்தாமணியில் மட்டும் ஒரு ஆங்கில வழி தனியார் பள்ளியும் ,ஒரு பெண்களுக்கான அரசு உதவி பெரும் பள்ளியும் உள்ளது.இப் பள்ளிகளில்  1500  மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நடுத்தர வர்க்கத்தினரே அதிக அளவில் படிப்பதால் பெரும்பாலான மாணவர்கள் சைக்கிளிலும்,நடந்தும் வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதியும், விபத்துகள் நேராமல் தடுக்கும் பொருட்டும் இப்பகுதியில் ரவுன்டானா மற்றும்  போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>