×

சொகுசு வாழ்க்கை நடத்த போலி சாவி தயாரித்து உறவினர் வீடுகளில் கொள்ளையடித்த காதல் ஜோடி சிக்கியது


சென்னை, நவ.26: சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு போலி சாவி தயாரித்து உறவினர் வீடுகளில் கொள்ளையடித்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டியன் (36). இவர், கடந்த சில தினங்களுக்கு முன், தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு, வேலைக்கு சென்றுவிட்டார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் பணம் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது. அந்த காட்சியை வீட்டின் உரிமையாளரிடம் காண்பித்தபோது, அதில் இருந்த வாலிபர் கோயம்பேட்டை சேர்ந்த தனது உறவினர் மகன் கார்த்திகேயன் (24) என்பதும், உடன் இருப்பது அவரது காதலி மதுரவாயலை சேர்ந்த நித்தியா (24) என்பதும் தெரிந்தது.

அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படிப்பை முடித்தவுடன் கார்த்திகேயன் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அதனை ஈடு செய்யவும், ஆடம்பரமாக வாழவும் என்ன செய்வது என்று காதலியுடன் சேர்ந்து யோசித்துள்ளார். அப்போது, கொள்ளையடிக்க முடிவு செய்தனர். அதில், வீட்டின் பூட்டை உடைக்காமலும், போலீசாரிடம் சிக்காமலும் நூதன முறையில் கொள்ளை அடிக்க வேண்டும் என திட்டம் தீட்டினர். அதன்படி, இருவரும் கார்த்திகேயன் உறவினர்களின் வீடுகளுக்கு அவர்களை நலம் விசாரிக்க செல்வதுபோல் சென்று, அந்த வீட்டில் உள்ள அறைகளை கண்காணித்துள்ளனர்.

மேலும், அவர்கள் வெளியே செல்லும்போது சாவியை எந்த இடத்தில் வைத்து விட்டு செல்கின்றனர் என்பதை அறிந்து கொண்டு, அந்த சாவியை போல் போலியான சாவியையும் தயார் செய்துள்ளனர். பின்னர், உறவினர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரம் பார்த்து, அவர்கள் வீட்டிற்கு சென்று, கதவைத் திறந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். உறவினர் என்பதால் கொள்ளை நடந்த வீடுகளில் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை. இதனால், பல்வேறு இடங்களில் உறவினர் வீடுகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி உள்ளனர், என்பது தெரியவந்தது. இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட...