×

நீதிமன்ற அவகாசத்தை மீறி தொழில் மனையை ஒப்படைக்காததால் வயர் அண்டு வயர் தயாரிப்பு நிறுவனம் பூட்டி சீல் வைப்பு: சிட்கோ மேலாளர் நடவடிக்கை

திருவள்ளூர், ஜன.8: திருவள்ளூர் அடுத்து காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் ஒயர் அண்டு ஒயர் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடந்த 2009ம் ஆண்டு தொழில் தொடங்க தமிழக அரசு உத்தரவின்பேரில், சிட்கோ நிறுவனம் தொழில் மனையை ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. சிட்கோ நிறுவனத்தின் தொழில் மனை ஒதுக்கிட்டு ஆணையின்படி, இரண்டு வருட காலத்திற்குள் தொழில் தொடங்க வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. ஆனால், அந்த இடத்தில் வயர் அண்டு வயர் தயாரிப்பு நிறுவனம் தொழில் எதுவும் தொடங்காமல், தொழில் மனையை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காலியாகவே வைத்திருந்தனர்.

இதனால், சிட்கோ நிறுவனத்தின் ஒதுக்கிட்டு நிபந்தனையின்படி, 2015ம் ஆண்டு ஒயர் அண்டு ஒயர் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொழில் மனையை, சிட்கோ நிர்வாகம் ரத்து செய்து ஆணை பிறப்பித்தது. ஆனால், வயர் அண்டு வயர் நிறுவனம் அந்த இடத்தை காலி செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்துக்கொண்டு, தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மேலும் ரத்து செய்யப்பட்ட ஆணையை எதிர்த்து, வயர் அண்டு வயர் தொழிற்சாலை நிறுவனம் ரத்து செய்யப்பட்ட தொழில் மனையை மீண்டும் எங்களுக்கே வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், கடந்த ஆகஸ்ட் மாதம் 2025ல் வழங்கிய தீர்ப்பில் 12 வாரத்திற்குள் அங்கிருந்து வயர் அண்டு வயர் தொழிற்சாலை நிறுவனம் வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

ஆனால், தொழிற்சாலை நிறுவனம் நீதிமன்றம் வழங்கிய அவகாசத்தையும் மீறி வெளியேறாமல் சிட்கோ நிறுவனத்தினிடம் தொழில் மனையை ஒப்படைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து காக்களூர் சிட்கோ மேலாளர் நந்தகுமார், சிட்கோ உதவி செயற்பொறியாளர் பிரம்மதேசன், வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஜான்சன், திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் குப்புசாமி ராஜா, கோபிநாத், தலைமை காவலர்கள் செல்வராஜ்குமார், உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து, நேற்று தொழில் மனை எண்.ஜி20டி வயர் அண்டு வயர் தயாரிப்பு நிறுவனத்திற்கு பூட்டி சீல் வைத்தனர். மேலும், தொழிற்சாலை மீது புட்லூர் கிராமம் சர்வே எண்:94, 102, 105ல் உள்ள இந்த இடமானது சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனமான சிட்கோவிற்கு சொந்தமான இடமாகும். எனவே, இந்த இடத்தில் அந்நியர்கள் யாரும் உரிய அனுமதியில்லாமல் நுழைந்தால், அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு முத்திரையுடன் சீல் வைக்கப்பட்டது.

Tags : Wire and Wire Manufacturing Company ,CIDCO ,Thiruvallur ,Tamil Nadu government ,Kakkalur ,CIDCO… ,
× RELATED ஆர்.கே.பேட்டையில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்