×

அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்

தர்மபுரி, நவ.22: தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனையாக இருந்த போது நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க 9 பார்மசிஸ்ட்டுகள் பணியாற்றி வந்தனர். புறநோயாளிகளும், உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. கடந்த 2008ல் மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், இதுவரை கூடுதலாக மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாததால் நோயாளிகள் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு, மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் பென்னாகரம், அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்ட பின்னரும்,  போதிய மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மருந்தாளுநர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 இது குறித்து மருந்தாளுநர்கள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் அரசு மருத்துமனைகளில் 1,500 மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். போதிய மருந்துகளை இருப்பு வைத்து, முறையாக நோயாளிகளுக்கு வழங்க வேண்டும். நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்காலிக மருந்தாளுனர்களை பணி நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு மருத்துவமனைகளில் கூடுதல் மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : pharmacist ,
× RELATED கடைகளில் மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும்