×

வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.20 கோடியில் நவீன குளிர்பதன கிடங்கு திறப்பு

தர்மபுரி, மார்ச் 28: பழைய பாப்பாரப்பட்டியில், வேளாண் வணிகத்துறை சார்பில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன குளிர்பதன கிடங்கு நேற்று திறக்கப்பட்டது. இங்கு 2 ஆயிரம் டன் புளி இருப்பு வைக்கும் அளவுக்கு இடவசதி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வனப்பகுதி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், விவசாயிகளின் பட்டா நிலங்கள் என மொத்தம் 4,405 ஏக்கர் பரப்பளவில் புளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புளியின் அறுவடை காலம் மார்ச் முதல் மே மாதம் வரை ஆகும். அறுவடை செய்யப்பட்ட புளியம் பழத்தின் ஓடு, கொட்டை மற்றும் நார் நீக்கப்பட்டு, மதிப்புக் கூட்டப்பட்ட புளியாக தயார் செய்யப்படுகிறது. மதிப்பு கூட்டு புளியாக மாற்றும் பணியில் சோகத்தூர், மதிகோண்பாளைம், பழைய தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி பூஜைகள் செய்து நடப்பாண்டுக்கான புளி அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் புளி கொள்முதல் செய்து, அதனை சுத்தம் செய்யும் பணிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த பணியில் பெண்கள் 90 சதவீதம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 30 சதவீத புளி அறுவடை மூலம் கிடைக்கிறது. 70 சதவீத புளி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்து, தர்மபுரி மாவட்டத்தில் பதப்படுத்தி, மதிப்பு கூட்டி, தென்னந்திய முழுவதுமாக  விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட புளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் புளியை ெமாத்தமாக கொள்முதல் செய்து, அதனை பதப்படுத்தி, குளிர்பதன கிடங்குகளில் இருப்பு வைத்து, சரியான விலை கிடைக்கும் போது, அதனை விற்பனை செய்து வருகின்றனர். இந்த புளி பதப்படுத்தும் தொழிலில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பாப்பாரப்பட்டியில் அரசு சார்பில் குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று, விவசாயிகள் மற்றும் புளி உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், பாப்பாரப்பட்டி அடுத்த பழைய பாப்பாரப்பட்டியில் உள்ள  வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகருடன் கூடிய குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டுள்ளது. 2 தளங்களுடன் அதிநவீன குளிர் சாதனங்களுடன் பாதுகாப்பான கிடங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் டன் புளி மூட்டைகள், ஒரே நேரத்தில் இருப்பு வைக்கும் வகையில், இந்த கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புளி பரிவர்த்தனை கூடம், அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன குளிர்பதன கிடங்கு நேற்று திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனரும், தனி அலுவலருமான பாலசுப்பிரமணியன், செயலாளர் ரவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, குளிர்பதன கிடங்கில் புளி மூட்டைகள் இருப்பு வைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பத்மினி, குளிர்பதன கிடங்கு ஒருங்கிணைப்பாளர் அருண் ஆகியோர், குளிர்பதன கிடங்கில் உள்ள வசதிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட புளி வணிகர்கள் சங்க செயலாளர் வினுபாஜ் ராஜ், பாப்பாரப்பட்டி பகுதி புளி வணிகர்கள் சங்க தலைவர் சின்னசாமி, செயலாளர் கணபதி, பொருளாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள், புளி உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Department of Agriculture ,
× RELATED காரைக்கால் மாவட்டத்தில் உளுந்து...